Friday, 23 February 2018

வேட்பாளர் அறிவிப்பில் காலதாமதம்; மஇகா பின்னடைவை எதிர்நோக்கலாம்?


ரா.தங்கமணி

ஈப்போ-
வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நிலவுவதால் மஇகா போட்டியிடும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக்கபட்டு வருவதாக அறியப்படுகிறது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படலாம் என்ற நிலையில் மஇகா போட்டியிடும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களாக களமிறக்கப்படுபவர் யார்? என்பது இன்னும் மூடுமந்திரமாகவே உள்ளது.

தேசிய முன்னணியில் உள்ள அம்னோ, மசீச, கெராக்கான் போன்ற கட்சிகள் கூட தாங்கள் போட்டியிடும் தொகுதிகள், களமிறக்கப்படும் வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறிந்து களத்தில் இறக்கியுள்ளது. இன்னும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தும் உள்ளனர்.

இந்நிலையில் மஇகா சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிக்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்கும் மஇகாவின் இத்தகைய போக்கினால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகிக் கொண்டே இருக்கிறது.

வேட்பாளர்களை வைத்தே மஇகாவின் வெற்றி உறுதி செய்யப்படும் என்ற போக்கு நிலவும் தற்போதைய சூழலில் மஇகா இன்னமும் வேட்பாளர்களை கண்டறிந்து களத்தில் இறக்காதது மிகப் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின்போது மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment