Sunday, 4 February 2018

ஊத்தான் மெலிந்தாங்கை தேமு மீட்டெடுக்க வேண்டும்- துணைப் பிரதமர்


ரா.தங்கமணி

ஊத்தான் மெலிந்தாங்-
14ஆவது பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றினால் இங்குள்ள இந்தியர்கள் இன்னும் அதிகமான சலுகைகளை அனுபவிப்பர் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

கடந்த இரு தவணைகளாக ஊத்தான் மெலிந்தாங் தொகுதி எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கிறது. இதனால் இங்குள்ள மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 2 இரு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றை எதிர்க்கட்சி தக்க வைத்திருப்பதால் எவ்வித மேம்பாடும் காண முடியாத சூழல் உள்ளது.

இது தவிர்க்கப்பட வேண்டுமானால் வரும் பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றுவதற்கு இந்திய சமுதாயம்  முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என இங்கு நடைபெற்ற 'ஒற்றுமை பொங்கல் விழா'வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்த தவறுகளை பேச வேண்டும். பழையதை விட்டு விடுவோம். இனி நடக்கப் போவதை பற்றி சிந்திப்போம். இங்குள்ள மக்கள் பல சலுகைகளை அனுபவிக்க தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை வழங்க வேண்டும்.

இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக நானும் டத்தோ சம்சூல் ருங்குப் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் திகழ்கிறோம். ஆனால் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி மட்டும் எதிர்க்கட்சி வசம் கிடப்பதை மக்கள் மாற்றியமைக்க வேண்டும் என பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறினார்.

இந்நிகழ்வில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், பேராக் மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ வ.இளங்கோ, ஊத்தான் மெலிந்தாங் மஇகா தொகுதித் தலைவர் டத்தோ சுப்பிரமணியம், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ.முருகையா, மஇகா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, பேராக் மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி, மாநில மகளிர் பிரிவுத் தலைவி தங்கராணி உட்பட 1,500க்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment