புனிதா சுகுமாறன்
ஈப்போ-
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் சீனர் வர்த்தக, தொழிலியல் சபையின் (பிசிசிசிஐ) சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் இங்குள்ள வெய்ல் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேராக் சீனர் வர்த்தக, தொழிலியல் சபையின் தலைவர் டத்தோ லியோவ் செவ் யீ உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார சூழல் சரிவு கண்டு வரும் வேளையில் மக்களிடையே பொருட்களை வாங்கும் சக்தியும் பலவீனமடைந்து வருகிறது.
நாணய மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் வர்த்தகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் காப்புறுதி திட்டத்தினால் அந்நியத் தொழிலாளர்களுக்கான மருத்துவ, காப்புறுதி செலவீனங்கள் அதிகரிப்பதோடு அது வர்த்தகர்களை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
இதனை கவனத்தில் அரசாங்கம் சில ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து வர்த்தகர்களின் பொருளாதாரச் சூழல் பாதிக்காத வண்ணம் நடவடிக்கையை அமலாக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட டத்தோ லியூ, நடப்பு அரசியல் சூழலையும் குறித்து பேசினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஶ்ரீ ஸம்ரி, வர்த்தகர்களின் பிரச்சினையை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களின் பிரச்சினை ஒருபோதும் கைவிடப்படவில்லை.
அவர்களின் மேம்பாட்டுக்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. எவ்வித பாகுபாடுமின்றி 'அனைவரும் மலேசியர்' என்ற அடிப்படையிலேயே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
அதோடு இந்நிகழ்வில் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ மா சியூ கியோங், அனைத்துலக வாணிப, தொழில்துறை இரண்டாவது அமைச்சர் டத்தோஶ்ரீ ஓங் கா சுவான், தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ உஸ்னி அனாட்ஸ்லா, பேராக் இந்தியர் வர்த்தக சபையின் பிரதிநிதி ரவிசந்திரன், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹா, பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் சியோங் சீ கிங், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டான் லியான் ஹோ உட்பட வர்த்தகர்களும், சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment