Tuesday, 13 February 2018

'என் மகள் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை'- தந்தை முனியாண்டி


நிபோங் தெபால்-
'இதற்கு முன்னர் என் மகள் எந்தவொரு தற்கொலை முயற்சிக்கும் முயன்றதில்லை. அவள் மீது தவறான பரப்புரைகளை திணிக்காதீர்கள்' என  உயிரிழந்த மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி தெரிவித்தார்.

இதற்கு முன் அவள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பதெல்லாம் பொய்யானது. அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள் கிடையாது.

"என் மகளை பற்றி எனக்கு தெரியும். நடந்த சம்பவத்திற்கு முன்னர் அவள் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவள் அதிகமான நண்பரக்ளை கொண்டிருந்ததால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பாள்" என இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

'தவறான தகவல்களை பரப்புவதை அனைவரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களின் இதயங்களை நொறுக்காதீர்கள்.  என் மகள் விவகாரத்தில் போலீசார் விசாரணையில் முடிவு தெரிய வரும். அதுவரை பொதுமக்கள் என் மகள் விவகாரத்தில் தீர்ப்பளிக்க வேண்டாம்' என அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மாணவி வசந்தபிரியா தனது மணிக்கட்டை வெட்டிக் கொண்டதாகவும் மருத்துவரின் உதவியை பின்பற்றுமாறு ஆலோசனையாளர்கள் வழங்கிய பரிந்துரையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பின்பற்றவில்லை எனவும் துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கூறியிருந்தார்.

ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் போலீசார் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி வசந்தபிரியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment