புனிதா சுகுமாறன்
ஈப்போ-
போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் பேராக் மாநிலத்தில் செயல்பட்டு வந்த போதைபொருள் தயாரிப்பு கும்பலை கைது செய்துள்ளனர். இதன் மூலம் 1.03 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள், வாகனங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் 12.30 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரை புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு, பேராக் மாநில குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஓர் இந்திய மாது உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர் என மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ பஹ்லாவான் ஹஸ்னான் பின் ஹசான் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 619,412 வெள்ளி மதிப்புடைய போதைப்பொருட்களும் 410,700 வெள்ளி மதிப்புடைய வாகனங்கள், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு 22 வயது முதல் 47 வயதுக்குட்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் உள்நாட்டைச் சேர்ந்த 6 இந்திய ஆடவர்களும் ஒரு பெண்மணியும், இலங்கையைச் சேர்ந்த ஓர் ஆடவரும் அடங்குவர்.
இங்கு போதைப் பொருளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் இதுபோன்ற குற்றங்களை துடைத்தொழிக்க பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு 1952 அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39பி கீழ் விசாரிக்கப்படுவதோடு மேல் விசாரணைக்காக வரும் 23ஆம் தேதி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment