கோலாலம்பூர்-
இன்றைய மாணவர் சமுதாயம் நாளைய சிறந்த சமுதாயமாக உருவெடுக்க கல்விவே சிறந்த வழியாகும். கல்வி ஒன்றாலேயே சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இராஜ யோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியானம் இயக்கம் (ஆர்பிடி) ஒவ்வோர் ஆண்டும் கல்விக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், இவ்வருடத்திற்கான கல்விக் கருத்தரங்கு அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
ஆர்பிடி இயக்கம் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தியான மையங்களை அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இவ்வியக்கம் களமிறங்கியுள்ளது.
ஆர்பிடி இயக்கத்தின் ஸ்தாபகர் டத்தோஶ்ரீ வி.பாலகிருஷ்ணன் (டத்தோஶ்ரீ குருஜி) டத்தின்ஶ்ரீ சுந்தரி பாலகிருஷ்ணன் (டத்தின்ஶ்ரீ ஜி) தோற்றுவித்த இந்த இயக்கம் ஆன்மீகப் பாதையில் கம்பீரமாகச் செயல்பட்டு வருகிறது.
நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த
கல்விக் கருத்தரங்கை முறையே திட்டம்மிட்டுச் சிறப்பாக நடத்தி முடித்தனர். முற்றிலும் இலவசமாக ஆர்பிடி இயக்கத்தால் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும்
கலந்துக்கொண்டனர்.
அதோடு, 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், கல்வி நிபுணத்துவர்களும் (விரிவுரையாளர், நிபுணத்துவ ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள்) தங்களின் நேரத்தை ஒதுக்கி வழிநடத்துபவர்களாகும், பேச்சாளர்களாகவும் தங்களை இந்நிகழ்ச்சியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
எஸ்பிஎம், எஸ்டிபிம், உயர்கல்வி, என முக்கிய அரசாங்கத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் மண்டபத்தில் 2018-ஆம் ஆண்டின் எஸ்பிஎம் மாணவர்களுக்கும், இரண்டாவது மண்டபத்தில் எஸ்டிபிஎம் / உயர்கல்வி மாணவர்களுக்கும், மூன்றாவது மண்டபத்தில் பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தலைசிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களாலும் புலமைப் பெற்ற தாள் திருத்துனர்களாலும் இப்பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மாணவர்களை தேர்வுக்கு முழுமையாகத் தயார் செய்யும் பொருட்டு அவர்களின் சந்தேகங்களையும் கேள்விகளையும் விலக்கும் வண்ணம் இப்பயிலரங்கம் அமைந்தது.
தேர்வு காலத்தின் போது கையாள வேண்டிய ஆயத்த முறைகளையும் மாணவர்கள் கற்றனர். மேலும், மாதிரிக் கேள்வித்தாட்கள், கையேடுகள், போன்றவை சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து எஸ்.பி.எம் தேர்வு முடித்த பின்னர் அவர்களின் உயர்நிலைக் கல்வி குறித்த சிறப்புக் கையேடுகளும் வழங்கப்பட்டது.
சிறந்த புள்ளிகளைப் பெறுவதற்கான தன்முனைப்பு, சிந்தனை ஆற்றலை புரிந்து கொள்வது, தேர்வுக்கான தரமான குறிப்புகள் பெறுவது, இலக்கை நிர்ணயிக்க உதவி புரிதல் போன்ற யுக்திகளை மாணவர்களுக்கு கற்பித்தனர்.
இன்னும் எஞ்சிய 10 மாதங்களில், எஸ்பிஎம் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுத்தல், பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் எவ்வாறு கல்வி நிதி ஏற்படுத்திக் கொடுத்தல், அரசாங்கம், தனியார் நிறுவனங்களிடமிருந்து சிறப்பு வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்தி கொடுத்தல் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பு அம்சமாக கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் சுற்று சூழலின் நலனைக்கருதி ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது. இம்மான்கன்றை நாடு தழுவிய மாணவர்கள் அவர்தம் பள்ளிகளில் முறையே நடுவதர்க்கான அனுமதி கடிதமும் கொடுக்கப்பட்டது.
முற்றிலும் இளையோர் சமூகத்தின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு கல்வி வளர்ச்சியின் புரட்சிக்கு ஒரு மைல்கல்லாய் அமையும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment