Monday 8 January 2018

'ஆண்ட மண்ணையும் சாம்ராஜியத்தையும் ஒற்றுமையின்மையாலே தொலைத்தோம்'- இனியும் வேண்டாம் பிரிவினை- வழக்கறிஞர் விவேகானந்தா

ரா.தங்கமணி
 சுங்கை சிப்புட்-
எவ்வித தலைமைத்துவப் போராட்டமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றுவதையே சுங்கை சிப்புட் இந்திய இயக்கம் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதனால்தான் 12 ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சீரான பாதையில் இயக்கம் சென்றுக் கொண்டிருக்கிறது என இயக்கத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் அமுசு.பெ.விவேகானந்தா கூறினார்.

'வலது கை கொடுப்பதை இடது கை அறியாது' என்பார்கள். அதேபோன்றுதான் இவ்வியக்கம் தாங்கள் செய்த சேவையை வைத்து விளம்பரம் தேடிக் கொள்வதில்லை.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது இயக்கத்தின் முதன்மை நோக்கமாக இருந்தாலும் இளம் தலைமுறையை சீரான பாதையில் வழிநடத்துவதும் மிக அவசியமானதாகும்.

அவ்வகையில் இளைஞர்கள் தடம் மாறி சென்று விடக்கூடாது எனும் நோக்கில் அமுசு.பெரியசாமி பிள்ளை கிண்ணம், யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு கல்வி முகாம், அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கின்ற ஓட்டப்பந்தயம், பாலர் பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி, இயக்க உறுப்பினர்களிடையே உறவை வலுப்படுத்துவதற்கான குடும்ப தின விழா, தீபாவளி விருந்தோம்பல், வசதி குறைந்தவர்களுக்கு அன்பளிப்பு என பல நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகிறோம்.

இளையோர், மாணவரின் நலன் காக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு சமூகத்தின் ஆதரவை வலுவாக உள்ளது; அது இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும்.

"பாண்டிய மன்னர்களின் ஆட்சியையும், ராஜேந்திர சோழனின் வரலாற்றையும் பேசிக் கொண்டிருக்கும் நாம் ஒற்றுமை இல்லாததால் ஆண்ட மண்ணை இழந்து,  மன்னர்களின்  சாம்ராஜியமே அழிந்து போனதை நினைக்க மறுக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் நாம் இழந்து பல உள்ளன. அந்த நிலை இன்னமும் தொடரக்கூடாது. நம்மிடையேயான ஒற்றுமை இன்னும் வலுவானதாக இருக்க வேண்டும். ஒற்றுமையை  முன்னிறுத்தி சமூகம் வழிநடத்தப்பட வேண்டும்". இந்த இயக்கத்திலும் ஒற்றுமை நிலவுவதால்தான் 12 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்படுகிறது. அவ்வகையில் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இயக்கத்தின் நடவடிக்கைக்கு  பலர் ஆதரவாக இருந்து நன்கொடைகளை வழங்குகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தொடர வேண்டும் என்ற விவேகானந்தா, தமிழ்க்கடவுள் முருகன்,  தனது தந்தையார் அமுசு.பெரியசாமி பிள்ளை ஆகியோரது நல்லாசியோடு இயக்கம் இன்னும் பல சிறப்பான சேவைகளில் ஈடுபடும் என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு, இயக்கம் பல ஆண்டுகளாக இயக்கம் பல நடவடிக்கைகளை ஈடுபட்ட வந்த போதிலும் மக்களின் ஆதரவு இல்லாமல் எதையும் செயல்படுத்த முடியாது. மக்களின் ஆதரவோடு பல நன்னெஞ்சங்களின் ஆதரவோடும் பல நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இவ்வேளையில் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் புதிய பண், புதிய சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் இயக்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் நடனம், உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் ஆகியவற்றோடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நேற்றிரவு நடந்த இந்நிகழ்வில் சுங்கை தியாரா தோட்ட மேலாளர் எஸ்.பூபாலன், பூச்சோங் தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான யோகேந்திரபாலன், சுங்க இலாகா துணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், முரளி கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணன்,  மருத்துவர் ஜெயபிரகாஷ், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார், சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் எம்.இளங்கோவன், சுங்கை சிப்புட் போலீஸ் துணைத் தலைவர் பரமேஸ்வரன், தொகுதி ஜசெக தலைவர் ஹெலன், தொகுதி பிஎஸ்எம் கட்சி தலைவர் அகஸ்டியன், சுகுமாறன், சுங்கை சிப்புட் மலேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் தாஸ் அந்தோணிசாமி, பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

1 comment: