நேர்காணல்: ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட 'அரசியல் சுனாமி'க்கு முன்னர் இந்திய சமுதாயத்தின் வலுவான பிரதிநிதியாக அரசியல் கட்சிகள் மட்டுமே கோலோச்சின. 'அரசியல் சுனாமி' ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்குப் பின்னர் அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் தலைதூக்க ஆரம்பித்தன.
இந்திய சமுதாயத்திற்காக தேசிய, மாநில, வட்டார ரீதியில் பல அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் உருவாகின. 2008க்கு முன்னர் தொடங்கப்பட்ட பல இயக்கங்கள் தங்களை பலம் வாய்ந்தவையாக உருமாற்றிக் கொண்டன. பொது இயக்கங்களாக உருவெடுத்தப் பின்னர் மக்களுக்கு பொதுச் சேவை, மாணவர்களுக்கு கல்விப் பணி, இளையோருக்கு பயிற்சிகள் என பொது இயக்கங்களை பல்வேறான மக்கள் சமூக நடவடிக்கையில் ஈடுபட்டன.
அவ்வகையில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் பல பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது 'சுங்கை சிப்புட் இந்திய இயக்கம்'. தற்போது 12ஆம் ஆண்டு விழாவில் காலடி வைத்துள்ள சுங்கை சிப்புட் இந்திய இயக்கம் சேவைகள், நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர் வீ.சின்னராஜு (சி), ஆலோசகர் வழக்கறிஞர் அமுசு.பெ. விவேகானந்தா (வி) ஆகியோருடன் நடத்தப்பட்ட நேர்காணல் 'பாரதம்' மின்னியல் ஊடக வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.
கே: சுங்கை சிப்புட் இந்திய இயக்கம் தொடங்கப்பட்டது எப்போது, அதன் நோக்கம்?
சி: 'சுங்கை சிப்புட் இந்திய இயக்கம்' கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. ஆனால் முதலில் இயக்கமாக செயல்படுவதற்கு முன்னர் சில நண்பர்களுடன் ஒரு குழுவாக இணைந்து இவ்வட்டாரத்தில் உள்ள இந்திய இளைஞர்களிடையே கால்பந்து குழுவை உருவாக்க முயன்றோம்.
அதற்கு ஏதுவாக இவ்வட்டாரத்தில் புகழ்பெற்றவராக விளங்கிய அமுசு.பெரியசாமி பிள்ளை அவர்களின் புதல்வர் அமுசு.பெ.விவேகானந்தாவை சந்தித்து கால்பந்து விளையாட்டை ஏற்படுத்துவது தொடர்பான திட்டத்தை கூறினேன்.
விவேகானந்தாவும் அவரின் தந்தையிடம் கால்பந்து விளையாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக எடுத்துக் கூறினார். பெரியவரின் சம்மதத்தோடு 'அமு.சுப்பையா பிள்ளை கிண்ணம்' என்ற பெயரில் முதன் முதலாக கால்பந்து விளையாட்டு தொடங்கப்பட்டது.
வி: 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'அமு.சுப்பையா பிள்ளை கிண்ணம்' விளையாட்டு தொடங்கப்பட்ட வேளையில் அதே ஆண்டு தந்தையார் காலமானார். அவரின் மறைவுக்குப் பின்னர் இந்த விளையாட்டு 'அமுசு.பெரியசாமி பிள்ளை கிண்ணம்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு குழுவாக அங்கீகாரமற்ற நிலையில் செயல்படுவதை விட முறையான திட்டமிடலோடு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் செயல்படுவதே சிறப்பானது என்ற ஆலோசனையை சின்னராஜு, அவரது குழுவினரிடம் கூறிய பின்னர், அனைவரின் கலந்தாலோசனையில் உருவானதே 'சுங்கை சிப்புட் இந்திய இயக்கம்' ஆகும்.
கே: சுங்கை சிப்புட் இந்திய இயக்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள், சமூக நடவடிக்கைகள்?
சி: சுங்கை சிப்புட் இந்திய இயக்கம் கால்பந்து விளையாட்டைதான் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அமுசு.பெரியசாமி பிள்ளை கிண்ணப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது இந்த போட்டி 12 வயதுக்கு கீழ்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான போட்டியாக உருமாறியுள்ளது.
அதேபோன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் கருத்தரங்கு, பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்னம் தீட்டும் போட்டி, இளையேருக்கான பயிற்சி, 'AMSP FC ' கிளப் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதோடு, ஆண்டுதோறும் சங்கத்தின் சார்பில் தீபாவளி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வசதி குறைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையானவை வழங்கப்படுகிறது.
கே: இவ்வியக்கம் தொடங்கப்பட்டது முதல் அடைந்துள்ள வெற்றி, சாதனைகள்?
வி: மக்கள் சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டே இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. எவ்வித அரசியல் நோக்கமும் இல்லாத பொது நலனை மட்டுமே முன்னிறுத்தும் வகையில் சங்கம் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
கால்பந்து விளையாட்டு தொடங்கப்பட்டு பல இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. கால்பந்து துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை உருவாக்கியுள்ளதே இவ்வியக்கம் அடைந்துள்ள முதல் வெற்றியாகும்.
பல்வேறு போட்டி விளையாட்டுகளில் பங்குள்ள கால்பந்து குழுவினர், மலேசிய இந்திய கால்பந்து சங்கம் (மீஃபா) நடத்திய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்றது.
இக்குழுவில் உள்ள இளைஞர்களி 4 பேர் பல்வேறு கால்பந்து குழுக்களில் பங்கெடுத்து மாதத்திற்கு 3,000 வெள்ளிக்கும் மேல் வருமானம் ஈட்டுகின்றன. இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து அவர்களை வாழ்வை சிறப்பாக அமைத்துள்ளதில் இயக்கத்தின் பங்கு அளப்பரியதாகும். முன்னாள் மலேசிய கோல் கீப்பர் முருகன் இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சியை வழங்கி வருகிறார். அவரோடு சின்னராஜு, உமாபதி, சுப்ரா ஆகியோரும் பயிற்சி வழங்குகின்றனர்.
அதோடு, ஓட்டப்பந்தயப் போட்டியை சிறப்பாக நடத்தி வருகிறோம். தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையில் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது 150 பேர் பங்கேற்கும் வகையில் ஓட்டப்பந்தயம் உருமாறியுள்ளது. இதில் இந்திய மாணவர்கள் மட்டுமல்லாது மலாய், சீனர், பூர்வக்குடியின மாணவர்களும் பங்கேற்கின்றனர். அனைத்து இன மக்களுடன் கலந்து பழகும்போதுதான் ஒற்றுமை மேலோங்கப்படும். அவ்வகையில் இது ஆக்ககரமான நடவடிக்கையாகும்.
மேலும், யூபிஎஸ்ஆர் பயிற்சிகளில் பங்கெடுத்த மாணவர்களில் சிலர் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயில்கின்றனர் என்பது பெருமைக்குரிய விஷயம் தான்.
கே: இயக்கம் துடிப்புடன் செயல்படுவதற்கு காரணம் என்ன?
சி: இவ்வியக்கம் தொடங்குவதற்கு அமுசு.பெரியசாமி பிள்ளை அவர்கள் வழங்கிய நல்லாசியே முதன்மை காரணம். அதோடு இயக்கத்திற்கு ஆலோசகராக இருக்கும் விவேகானந்தாவின் ஆதரவும் துடிப்புடன் இயங்குவதற்கு காரணம் ஆகும்.
வி: இவ்வியக்கம் துடிப்புடன் இருப்பதற்கு செயலவை உறுப்பினர்களும் உறுப்பினர்களும் ஒரு காரணம் ஆவர். 30 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பான வழிகாட்டலில் நடத்தப்படும் இவ்வியக்கத்தில் இதுவரை தலைமைத்துவப் போராட்டம் வந்ததில்லை. அனைவரும் ஒரு குடும்பமாக பங்கேற்று அர்ப்பணிப்பு உணர்வுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையாற்றுவதன் விளைவே இன்று காண்கின்ற விழாவாகும்.
'மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; நல்லதை செய்ய வேண்டும்' என்ற கோட்பாட்டின் வழி இயக்க உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து களப்பணி ஆற்றி வருகின்றோம். அவர்களின் சேவை வழி சங்கம் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது.
கே: இயக்கத்தின் எதிர்காலத் திட்டங்கள்?
வி: மாணவர் சமுதாயத்தை மேம்படுத்துவது, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கான ஆக்ககரமான திட்டங்களை இயக்கம் வகுத்து வைத்துள்ளது. அந்த திட்டங்கள் எல்லாம் நிச்சயம் அமலாக்கம் காணும்.
கே: இயக்கத்திற்கான ஆதரவு எப்படி உள்ளது?
சி: இயக்கத்தின் பலமாக உள்ள விவேகானந்தாவே பெரும் பலமாக திகழ்கிறார். அவரின் ஆதரவுக்கு என்றுமே பஞ்சமில்லை. அவரை தவிர்த்து சுங்கை தியாரா தோட்ட மேலாளர் எஸ்.பூபாலன், பூச்சோங் தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான யோகேந்திரபாலன், சுங்க இலாகா துணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், முரளி கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணன், அமரர் எழுத்தாளர் பூ.அருணாசலம், மருத்துவர் ஜெயபிரகாஷ் போன்றோர் இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவும் பொருளாதார, நிதியுதவியும் வழங்கி வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாது இன்னும் பல உதவிகளை வழங்கி வரும் நல்லுள்ளங்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment