இந்திய வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஏதுவாக தேசிய முன்னணியின் இதர பங்காளி கட்சிகளுடன் இணைந்து பேரணி நடத்த வேண்டிய அவசியம் மஇகாவுக்கு இல்லை என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஏதுவாக மஇகா வேறு வழிமுறைகளை பின்பற்றும். பேரணி நடத்துவதன் மூலமாக இந்தியர்களின் வாக்குகளை வென்று விட முடியாது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவை பெறுவது குறித்து மஇகா இதர பங்காளிகட்சிகளுடன் கலந்தாலோசித்து வருகிறது. இந்திய பங்காளி கட்சிகளுடன் மஇகா நல்லுறவை பேணி வருகின்ற போதிலும் ஒன்றுகூடும் பேரணியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் சொன்னார்.
வரும் பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நாளை ஜாலான் அம்பாங்கிலுள்ள மசீச கட்டடத்தில் பேரணி ஒன்றை மசீசவும் கெராக்கானும் நடத்தவிருக்கின்றன.
இவ்விரு கட்சிகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தாங்கள் ஒன்றிணைந்து செயல்படவிருப்பதாக மசீச பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ ஒங் கா சுவான், கெராக்கான் கட்சி பொதுச் செயலாளர் டத்தோ லியாவ் தெக் மெங் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment