Thursday, 25 January 2018

கிரகண காலம் இறைவழிபாட்டுக்கு உகந்ததா? ஆன்மீகம் சொல்வது என்ன?


ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஆண்டுதோறும் நிகழும் சூரியன், சந்திர கிரகணங்கள் இவ்வாண்டு எப்போதும்போல் இல்லாமல் இன்று விவாதிக்கப்படகூடிய ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

இவ்வாண்டு நிகழக்கூடிய சந்திர கிரகணம் தைப்பூச தினத்தன்று வருவதால் முருகனை வழிபடும் பக்தர்களின் வேண்டுதலும், பத்துமலைத் திருத்தலத்தின் நடவடிக்கையும், இந்து சமய இயக்கங்களின் கருத்துகளும், மக்களிடையே காணபடும் தெளிவில்லா சூழலும் இவ்வாண்டு தைப்பூச தினத்தை இப்போதே தள்ளாட வைத்துள்ளது.

சந்திர கிரகணத்தின்போது பல நாடுகளில் உள்ள ஆலயங்களில் திருகாப்பு இட்டு நடை சாத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில் மலேசியாவில் பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் திருத்தலத்தில் வழக்கம்போல் பூசைகள் நடைபெறும் எனவும் பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணம் ஏற்படும் நேரத்தில் ஆலயங்களில் பூசைகள் நடத்தப்படக்கூடாது எனவும் பத்துமலை தேவஸ்தானம் சமய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடாது எனவும் மலேசிய இந்து சங்கம் உட்பட பல சமய இயக்கங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

இரு வெவ்வேறான கருத்துகள் நிலவும் தைப்பூச நாளில் ஏற்படும் சந்திர கிரகணம்  குறித்து மக்கள் தெளிவடைய வேண்டி மலேசிய இந்து  அர்ச்சகர் சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீ சிவஶ்ரீ  மு.அ.ராம.நித்தியானந்த குருக்கள்  சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

கே: தைப்பூச நாளில் ஏற்படும் சந்திர கிரகணம், மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா?

ப: தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தைப்பூச நாளில் மக்கள் முருகப் பெருமானின் அருள் வேண்டி பால்குடம், காவடிகளை ஏந்தியும், அபிஷேகப் பொருட்களை காணிக்கை செலுத்தியும் வழிபடுவர்.
இவ்வாண்டு தைப்பூச நாளில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் பெரும்பாலான ஆலயங்களில் திருகாப்பு இட்டு வழிபாடுகளை நிறுத்திக் கொள்கின்றன.
ஆனால் பத்துமலை முருகன் தேவஸ்தானம் மட்டும்தான் இதற்கு மாறாக ஆலயம் திறக்கப்பட்டு பூசைகள் வழக்கம்போல் நடைபெறும்  என கூறுகின்றது.

சூரியன், சந்திர கிரகணத்தின்போது தீய கதிர்வீச்சுகள் பிரபஞ்சத்தில் படர செய்யலாம். அச்சமயம் பிராணவாயு குறைந்து கரியமில வாயு அதிகம் வெளியேற்றப்படும்போது அதனால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு மக்களுக்கு நோய்களையும் பல உடல் உபாதைகளையும் கொண்டு வரலாம். இது அறிவியல்பூர்வமாக சொல்லப்பட்ட தகவல்களாகும்.

ஆயினும் நமது முன்னோர்கள் அறிவியல் ரீதியாக இல்லாமல் சமய ரீதியாக சொல்லி விட்டுச் சென்றுள்ளனர். கிரகண நேரங்களின்போது ஆலயங்களில் பூசைகள் நடைபெறக்கூடாது, உணவு எடுக்கக்கூடாது, கிரகணம் முடிந்த பின்னர் ஆலயங்களை கழுவி சுத்தம் செய்து, தெய்வ திருவுருவச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பின்னரே வழிபாடுகள் நடத்தப்படும்.
கிரகணத்தால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சுகளால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  ஒன்றாக கூடுவதை தவிர்க்க ஆலயங்களில் திருகாப்பிடும் முறை கடைபிடிக்கப்பட்டது.

கிரகணத்தின்போது கதிர்வீச்சுகளின் அபாயத்தால் உணவு கூட விஷமாக மாறும் என்பதன் அச்சமயம் உணவு அருந்தக்கூடாது என சொல்லப்பட்டது.
ஆனால் முன்னோர்கள் வகுத்த சமய முறைகளையும் மீறி சந்திர கிரகணத்தின்போது ஆலய பூசைகள் வழக்கம்போல் நடைபெறும் என கூறப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கே: கிரகணம் ஏற்படும் காலம் இறை வழிபாட்டுக்கு உகந்ததா? ஆன்மீக ரீதியாக சொல்லப்படுவது என்ன?

ப: கிரகண காலத்தின்போது இறை வழிபாடுகள் நடத்தப்படுவதில்லை. ஆன்மீக ரீதியாக கிரகண காலத்தின்போது துஷ்ட காரியங்களும் துர் தேவதைகளுக்கான பூசைகளும், மாய, மந்திர காரியங்களும் நடத்தப்படுகின்றன.

கிரகணம் ஏற்படும் நேரத்தில்தான் சில மாய தந்திரகாரர்கள் தங்களது துர் தேவதைகளுக்கு பூசை வழிபாடுகளை நடத்துவதற்கு உகந்த காலம் என ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.

கே: கிரகண நேரத்தில் பூசை செய்வது சிறப்பானது என சொல்லப்படுகிறதே?

ப: அது முற்றிலும் தவறானது. சந்திர கிரகணத்தின் போது தமிழ்நாட்டிலுள்ள பல ஆலயங்களில் நடை சாத்தப்படுகிறது. முருகப் பெருமானின் உகந்த பழனிமலையிலும் கூட கிரகணத்தை முன்னிட்டு இரவில் நடத்தப்பட வேண்டிய தேரோட்டம் காலையில் நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரிலுள்ள ஆலயம் சந்திர கிரகணத்தின்போது பூஜைகள் நடத்தப்படாது என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டது. இவ்வாறு இருக்கையில் இங்கு மட்டும் சமயத்துக்கு மாறாக புது தகவல்கள் கொடுத்து மக்களை குழப்பும் நடவடிக்கைதான் மேற்கொள்ளப்படுகிறது.

கே: சமயம் சார்ந்த இயக்கங்களின் ஒருமித்த கருத்து என்ன? மலேசிய மக்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?

ப: சந்திர கிரகணத்தின்போது ஆலயம் திருகாப்பிடுவதை மலேசிய இந்து சங்கம் உட்பட சமயம் சார்ந்த பல இயக்கங்கள் வலியுறுத்துகின்றன. மலேசிய இந்து அர்ச்சகர் சங்கத்தின் அங்கத்துவம் பெற்றுள்ள அர்ச்சகர்களுக்கு கிரகணத்தின்போது பூசைகள் நடத்தப்பட வேண்டாம் என அறிவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

கிரகணத்தால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள முனைய வேண்டும். கிரகணத்திற்கு பின்னர் பரிகாரப் பூசை செய்யப்படும் என்பது 'நோய் வந்த பின்னர் மருந்து சாப்பிடுவது' போலாகும். அந்த நோயை ஏன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது வாதம்.

ஆலயத்திற்கு செல்ல வேண்டாம் என யாரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எது நல்லது என்பதை சிந்தித்து மக்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment