Friday, 5 January 2018

"பன்மை வகுப்புகளால் அபாயம்" மாணவர் கல்வித்தரம்- ஆசிரியர் நலன் பாதிக்கப்படலாம்? - சிவகுமார் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஈப்போ-
தற்போது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்மை வகுப்புகளால் (Kelas Bercantum) மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, ஆசிரியர்களுக்கு மன உளைச்சலும் ஏற்படும் அபாயம் உள்ளதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் வலியுறுத்தினார்.

30 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் 2ஆம், 3ஆம் வகுப்புகளும் 4ஆம், 5ஆம் வகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு  பாட போதனை மேற்கொள்ளப்படவிருப்பது ஆரோக்கியமற்றதாகும்.

ஒரு பாட போதனைக்கு 1 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் சூழலில் குறிப்பிட்ட நேரத்தில் 2ஆம், 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பாடத்தை நடத்த வேண்டும்.

இது ஆசிரியர் பணியை கடினமாக்கியுள்ளதோடு அரை மணி நேரத்தில் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது மற்றொரு வகுப்பு மாணவர்களின் பாட நேரம் வீணாகிறது.

பன்மை வகுப்பு திட்டத்தினால் மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதோடு பன்மை வகுப்பு திட்டத்தினால் அப்பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதோடு பிற பள்ளிகளுக்கு அவர்கள் மாற்றலாகி செல்லக்கூடும். அதோடு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயில்கின்ற பயிற்சி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக்கப்படலாம்.

மலேசியாவில் 300 பள்ளிகளில் பன்மை வகுப்பு திட்டம்
அமலாக்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 125 தமிழ்ப்பள்ளிகள் அடங்கும்.

இத்திட்டம் மாணவர்களின்  கல்வித்தரத்தை பாதிக்கச் செய்யும் என்பதால் தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்கக்கூடும்.
அனைத்து விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பன்மை வகுப்பு திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் இது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பேராக் மாநில நம்பிக்கைக் கூட்டணியின் செயலாளருமான சிவகுமார் கூறினார்.

No comments:

Post a Comment