Saturday, 6 January 2018

முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாத புந்தோங் மின்சுடலை- அலட்சியங்கள் தொடர்கதையா? - சிவசுப்பிரமணியம் கேள்வி

புனிதா சுகுமாறன்

\ஈப்போ-
முறையான பராமரிப்பும் பாதுகாப்பு அம்சமும் இல்லாததால் புந்தோங் மின்சுடலை இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு ஓர் இந்தியக் குடும்பம் பெரும் சங்கடத்திற்கு ஆளானதோடு ஓர் ஆடவர் சுடுநீர் தொட்டியில் விழுந்து பெரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

மரணமடைந்த ஒரு பெண்மணியின் உடலை தகனம் செய்வதற்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் புந்தோங் மின்சுடலைக்கு வந்த இந்தியக் குடும்பம், அங்குள்ள இரு இயந்திரங்களும்  பழுதடைந்துள்ளதை கண்டு அதிருப்தி அடைந்தனர்.

இந்த மின்சுடலை நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்தனர். 2.1 மில்லியன் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மின்சுடலைக்கு பேராக்  மாநில அரசாங்கம் 1.3 மில்லியன் வெள்ளியை ஈப்போ இந்து தேவஸ்தானத்திடம் வழங்கியது.

இந்த மின்சுடலையை பராமரிக்க தகுதியான பொறியியலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அனுபவமே இல்லாத பராமரிப்பாளரே இந்த இரு இயந்திரங்களையும் பராமரித்து வந்துள்ளார்.

மேலும் இயந்திரம் பழுதடைந்தது கூட இறந்தவரின் குடும்பத்தினருக்கு சொல்லாமல் பிரேதத்தை மின்சுடலைக்குக் கொண்டு வந்து சாங்கிய காரியங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் இயந்திரம் செயல்படாததால் மற்றொரு இயந்திரத்திற்கு மாற்றியுள்ளனர். அதுவும் செயல்பட முடியாமல் காலதாமதாம் ஆனதால் சம்பந்தப்பட்ட குடும்பம் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து ஈப்போ இந்து தேவஸ்தானத்திடம் கேட்டபோது முறையான பதிலும் வழங்கப்படவில்லை.

ஈப்போ வட்டார மக்களுக்கு வசதியான இந்த புந்தோங் மின்சுடலையை ஈப்போ இந்து தேவஸ்தான சபா முறையாக பராமரிக்க தவறியுள்ளதால் இந்த மின்சுடலையின் பராமரிப்புப் பணியை ஈப்போ மாநகர் மன்றமே மேற்கொள்ள வேண்டும் என இங்கு ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிவசுப்பிரமணியம்  கூறினார்.

No comments:

Post a Comment