Thursday, 25 January 2018
AS1M பங்குகள்; இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - டத்தோ சிவராஜ்
கோலாலம்பூர்-
இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக பிரத்தியேகமாக அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள 150 கோடி அமானா சஹாம் ஒரே மலேசியா முதலீட்டு திட்டத்தில் இந்திய இளைஞர்கள் பங்கேற்று நன்மையடைய வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிமுகப்படுத்திய இந்தியர் பெருவரைவு திட்டத்தில் அமானா சஹாம் ஒரே மலேசியா முதலீட்டு திட்டமும் ஒன்றாகும்.
நாட்டிலுள்ள பல வங்கிகள் அமானா சஹாம் நேஷ்னல் பெர்ஹாட் (ஏ.எஸ்.என்.பி) கீழ் முகவர்களாக இயங்கத் தொடங்கியுள்ளது. இந்திய சமூகத்தினர் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று பதிந்துக்கொண்டு அமானா சஹாம் ஒரே மலேசியா பங்குகளை வாங்க முடியும். ஏற்கனவே அவர்கள் இந்த பங்குத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தால் 30,000 யூனிட்டுகள் வரையில் முதலீட்டை உயர்த்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் குறைந்தது 100 வெள்ளியில் முதலீடு செய்ய முடியும். முதலீட்டாளர்கள் தங்களது அடையாள அட்டையை மட்டுமே கொண்டு சென்று அந்த வங்கிகளில் பங்குகளை வாங்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தில் 6 விழுக்காட்டிற்கும் மேல் இலாப ஈவு வழங்கப்பட்டதன் வாயிலாக முதலீட்டாளர்களுக்கு ஆரோக்கியமான இலாப ஈவை வழங்கியதற்கான ஆதாரப்பூர்வமான பதிவை இந்த திட்டம் கொண்டிருக்கின்றது. ஆகையால், நல்ல முறையில் இந்த முதலீட்டு திட்டம் இலாப ஈவை வழங்குவதால் பல்வேறு சேமிப்புகளைக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்று நன்மையடைய முடியும்.
இந்த முதலீட்டு திட்டத்தில் வயது வரம்பு இல்லாததால் இளம் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
வருங்காலத்தில் தங்களது வருமானத்தைப் பல்வகைப்படுத்திக்கொள்வதற்கு இந்திய இளைஞர்களுக்கு இந்த முழுமையான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் இடம்பெறுவதன் வாயிலாக மலேசியாவில் பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தில் அவர்கள் இடம்பெறுவதோடு எதிர்காலத்தில் அவர்களின் நிதி பாதுகாப்பிற்கு இது உத்தரவாதம் அளிக்கின்றது.
2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக இந்த திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர்துறையின் முயற்சியின் கீழ் இந்த திட்டம் அமலாக்கம் காண்பதால் ம.இ.காவின் தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கும் செடிக்கிற்கும் ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்ப இந்த முதலீட்டு திட்டத்தில் இந்திய இளைஞர்கள் பங்குப்பெற்று நன்மையடைவதைக் காண விரும்புகின்றேன். தேசிய நிதியின் வாயிலாக நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதன் வழி நாம் மலேசியர்களாக ஒன்றாக வளர்ச்சி காண்போம் என டத்தோ சிவராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment