Sunday, 21 January 2018
முள் படுக்கை போன்றது ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி- வீ.கணபதி ராவ்- பகுதி -4
நேர்காணல்: கோ.பத்மஜோதி, வீ.மோகன்ராஜ்
ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் பல கனவுகளுடன் அப்பதவியில் அமர்ந்தேன். ஆனால் பதவியேற்ற பின்னர் தான் அது புனிதமாக கருதப்படும் பதவியல்ல, சில சுயநல பேர்வழிகளின் லாப கணக்கை பெருக்கிக் கொள்ள கீழ்த்தரமான செயல்களுக்கு வழிவகுக்கும் 'அதிகார தோரணை' என்பது புரிய வந்தது.
இப்பதவியில் முன்பு அமர்ந்திருந்தவர்கள் சிலர் செய்த கீழ்த்தரமான செயல்கள் என்னையும் பின்தொடர்ந்தது. ஆனால் அதை நான் புறந்தள்ளியதால் கீழ்த்தரமான செயல்களிலிருந்து தப்பித்தாலும் நற்பெயரை களங்கப்படுத்தப்பட்டது என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்.
அவருடனான 'பாரதம்'மின்னியல் ஊடக நேர்காணலின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது
கே: ஓர் ஆட்சிக்குழு உறுப்பினராக நீங்கள் சந்திக்கும் சவால்கள், எதிர்ப்புகள்?
ப: இப்பதவியில் அமர்ந்திருப்பது ஒரு முள்படுக்கை மீது படுத்திருப்பதை போல் உணர்கிறேன். ஆட்சிக்குழு உறுப்பினர் என்பது கெளரவமான, புனிதமான பதவியாக பார்க்கிறோம். ஆனால் இப்பதவியில் அமர்ந்த பின்னர்தான் இப்பதவி அழுக்கு நிறைந்ததாகவும் ஒழுக்கவும் நேர்மையும் அற்றதாகவும் உள்ளது என்பதை உணர்கிறேன்.
இப்பதவியுல் முன்பு அமர்ந்திருந்தவர்கள் செய்த கீழ்த்தரமான, ஒழுக்கமற்ற செயல்கள் என்னை நாடி வந்தது. ஆனால் இப்பதவியின் புனிதமும் என்னுடைய சுய ஒழுக்கமும்தான் அந்த 'சாக்கடையில்' விழாமல் பார்த்துக் கொண்டது.
மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை 'சூறையாடுவதற்காக' ஒரு கூட்டமே வந்த பேரம் எல்லாம் பேசியது. மக்கள் பணத்தில் எனக்கே பேரம் பேசப்படுகிறது என்றால் அவர்களுக்கு எவ்வளவு லாபம் அதில் சேரும் என யோசித்து, சில தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்து மக்களின் பணம் மக்களிடம் நேரடியாக சேர்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டேன்.
இத்தகைய நடவடிக்கையினால் என்னால் பயனடையாத அந்த 'பேர்வழிகள்' என்னை 'தெலுங்கர்' எனவும் தெலுங்கு வம்சாவளியினருக்கு மட்டுமே உதவுவதாகவும் முத்திரை குத்தி என் நற்பெயரை சீர்குலைக்க முயன்றனர்.
எனது பெயர் 'ராவ்' என்று இருப்பது என் வம்சாவளியை குறிக்கலாம். ஆனால் அதற்காக ஓர் அரசு பதவியில் இருந்து கொண்டு பாரபட்சம் காட்டுகிறேன் என கூறுவது முட்டாள்தனமாகும். இப்பதவில் அமர்ந்து கொண்டு எல்லோரையும் சமமாக தான் பார்க்கிறேன். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பிரிவினை எல்லாம் கிடையாது.
சிலரின் சுயநலத்திற்காகவும் ஏகபோக ஆசைகளுக்காவும் பிறர் மயங்கி இருக்கலாம். ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் நான் ஒருபோதும் இப்பதவியில் அமர்ந்து கொண்டு அந்த தவற்றை செய்ய மாட்டேன். சுயநல பேர்வழிகளின் ஆசைவார்த்தைகளில் மயங்காமல் இருப்பதே நான் சந்திக்கும் மிகப் பெரிய சவால்.
கே: நான்கு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இப்பதவிக்கான கடமையை சரிவரச் செய்தோம் என திருப்தி கொள்கிறீர்களா?
ப: ஆட்சிக்குழு உறுப்பினராக எனக்கு கொடுத்துள்ள பொறுப்பினை மிகச் சிறப்பாக செய்துள்ளேன் என்றே கருதுகிறேன். ஏனெனில் இப்பதவிக்கு வந்த பின்னர் பல ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளேன்.
தமிழ்ப்பள்ளி, ஆலயம், தோட்டப்புற மக்களின் பிரச்சினை, குறிப்பாக இந்தியர்களின் பிரச்சினை என எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பான முறையில் தீர்வு கண்டுள்ளேன்.
எல்லா பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன் என கூற முடியாது. சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. காலதாமதம் ஆனாலும் அவற்றுக்கு உரிய தீர்வு காண முற்படுவேன்.
கே: சிலாங்கூர் மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
ப: 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி வசமானது. அதன் தொடர்ச்சி 13ஆவது பொதுத் தேர்தலில் எதிரொலித்தது.
மத்தியில் ஆளும் கட்சியாக தேசிய முன்னணி இருந்த போதிலும் ஒரு மாற்றம் வேண்டும் என்ற துணிச்சலுடன் இம்மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய சிலாங்கூர் மக்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.
தனக்கான அரசு அமைய வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே மாநில அரசை மக்கள் கூட்டணி கைப்பறியது. அதற்கேற்ப ஆளும் சிலாங்கூர் மாநில அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
எங்கள் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை ஒருநாளும் பாழாகி விடாது. அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதை விட மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் சேவகர்களாவே முதலில் கருதுகிறேன். எனக்கு வாக்களித்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கோத்தா அலாம் ஷா மக்களுக்கும் இவ்வேளையில் எனது நன்றி.
வரும் 14ஆவது பொதுத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியுரிமையை தக்க வைத்துக் கொள்ள வழிவகுப்பர். நம்பிக்கைக் கூட்டணியின் மூலம் இன்னும் மக்களுக்கு அதிகமான திட்டங்களை வழங்குவோம் என்பதை உறுதியாக கூறுகிறேன். நன்றி.
- முற்றும் -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment