ஈப்போ-
230 இளைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள 'ஜோ' (Joe) திரைப்படம் மலேசிய ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது என அத்திரைப்படத்தின் இயக்குனர் சூரியவேலன் கூறினார்.
மலேசியா- சிங்கப்பூர் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. குறும்படமாக உருவெடுத்த இது பின்னர் 2015ஆம் ஆண்டில் 'விகடகவி' மகேந்திரனின் சந்திப்புக்குப் பின்னர் ஓர் கூட்டணி ஒப்பந்தத்தில் திரைப்படமாக உருவெடுத்தது.
இப்படத்தின் முதன்மை கதாநாயகர்களாக புரவலன், ராகதீபன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளராக ஸ்டீபன் ஷேசரியா பணியாற்றியுள்ளார். மலேசிய, சிங்கப்பூர் கலைஞர்கள் நடிப்பில் உருவாகியுள்ளதோடு தொழில்நுட்ப ரீதியில் மலேசியக் கலைஞர்கள் பெருமளவு பங்காற்றியுள்ளனர். இருநாடுகளைச் சேர்ந்த 230 இளைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் மலேசிய ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சாரம் மழையே' பாடல் யூடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்னும் அதிகமான ரசிகர்கள் திரையரங்கிற்குச் சென்று இப்படத்தை பார்க்க வேண்டும் என இயக்குனர் சூரியவேலன் குறிப்பிட்டார்.
இதனிடையே, இப்படத்தின் சிறப்பு காட்சி இங்குள்ள தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேலுக்கு திரையிடப்பட்டது. இதில் பேசிய அவர், மலேசியத் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் நமது திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தால்தான் மலேசிய கலைத்துறை இன்னும் அபரிமிதமான வளர்ச்சி காணும் எனவும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment