Thursday, 30 November 2017

Recognization for local artists in Ganggai Amaran's Musical Night


      All seasons event management in association with Brightex Enterprise are proudly organizing "En Iniya Pon Nizhave" a grand live musical night by  South India's famous musical director and playback singer Ganggai Amaran.

      It is known that Maisuri Groups of Companies and education instituation will be the main sponsor of this musical event whereby Trigon Paint and Jehevah Interiors are being the co sponsors for this event. Moreover, this event which themed as " The journey of Isainyani Ilaiyaraga - Kalainyani Ganggai Amaran, will be held for the very first time in our country, Malaysia.

    As stated by Ashrouf,  one of the organizer of this event in a press meet recently, the founder of Black Hunter Production and director of  'Vettai Karupar Ayya' movie,  GK and our local artist Kash Villanz are giving a continuous support for this event.

       This lively event will be taking place at Midlands Convention Centre, Shah Alam on coming 23rd December at 7.30 in the evening. The organization crew are expecting that at least 2000 crowd will join in this event. The main highlight of this event is Maestro Ganggai Amaran will be performing in this event collaborating together with Gentleman Orchestra all the  way from India. Not only that, many other famous playback singers and artists from India will be joining together in this event. The most interesting part is, our local  singers also will be given a golden opportunity to share the stage with the legend.

    At the same time, Brightex company's owner claimed that 10 Special Awards would be presented to our very own Malaysian Artists by the Maestro himself on that day. There also will be perfomances by Malaysian artists Datin Sri Shaila Nair, Shamini R. Villanz, Michael Rao & Gayathri.

     It is proud to say that 25% of the money collected from this show will be contributed to Yayasan Seribu Harapan Orphanage which is located at Bukit Tinggi, Klang.

   Recently the press meet of this event was held successfully at Tan Sri Soma Auditorium Hall, Kuala Lumpur. Among those who joined in the press meet were Trigon Paint chief executive Ganesan, Dr Purushothamanan, Tuan Kassim, Elanggovan, and many other important personalities. Makkal Osai's journalist and also local host,  Jayaseelan successfully coordinated this event as per expected.

     For further enquiries about this grand event, please do not hesitate to contact 016-6191786 or 014-3271310.

ஆபாசப் படம் விநியோகம்; ஆடவர் விடுவிப்பு

புத்ராஜெயா-
ஏழாண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த ஆசிரிய ர் ஒருவரை மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.

டத்தோ முகமட் ஸவாவி சாலே, டத்தோ அப்துல் ரஹ்மான் செப்லி, டத்தோ கமாட்டின் ஹஷிம் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு 38 வயதுடைய அவ்வாடவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சி.சண்முகத்தை விடுதலை செய்த வேளையில் அவ்விரு நீதிமன்றங்களின் தீர்ப்பில் தலையிடுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித காரணங்களும் இல்லை என இக்குழுவுக்கு தலைமையேற்ற நீதிபதி முகமட் ஸவாவி தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் ஏப்ரல் 21- 27 தேதிகளில் சிலாங்கூர் ரவாங், தாமான் காரிங் உத்தாமாவைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கு பல்வேறு ஆபாசப் படங்களை தைதொலைபேசியின் வழி அனுப்பியதாக சண்முகா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவியல் பிரிவு 293இன் கீழ் விசாரிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கடந்த 2015 ஜனவரி 26ஆம் தேதி செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சண்முகாவை விடுதலை செய்த வேளையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஷா ஆலாம் உயர்நீதிமன்றமும் அவரை விடுதலை செய்தது.

Wednesday, 29 November 2017

'Villavan - The Vigilante' Ready To Hit the Cinemas Soon


     'Villavan - The Vigilante', the first Tamil movie produced by GVKM elephant Pictures will be releasing soon in nearby theatres. This film is a reality based action movie which revolves around a superhero type of story directed by director Vaasan. Dato Seri Vinod, newly introduced actor,  who is also known as one of the producer of this movie will be playing the lead role together with Sangeetha Krishnasamy, who won the best actress category  award recently.

    Recently, a grand audio launch of this movie was held at NU Sentral. All the songs of this movie turned out very well with amazing musics from music director Sha. It is known that Ashwein Chakkravarthy worked as the lyricist for the wonderful song 'Podu Sakka Podu' whereas South India's one of the best playback singer Karthik has sung this song. Not only that,  Ashwein Chakkravarthy also had written the lyrics for the songs 'Unnai Naane' and 'O Zoriya' from this movie. This movie is consists of five amazing songs where the entire team strongly believe that these wonderful songs will play a crucial role for the success of this movie. Furthermore, it is undeniable that our local  singers had collaborated together with South India's playback singers and made the songs sound more mesmerizing with their magical voices. Among those singers and lyricists who has worked in this movie are Shweta Mohan, Suchith Suresan, Mathanakumar, Swarna Deepan, Thinesh Sivanyanam, Sha Zovve, La Ittigasarz, Hyde Karty, Avathara, Aneithazef, YJR, Param Sivanyanam, Indiran Shanmugam and Meerlyn and Nassav.



       The crew has contributed their full effort and made it easier for the public to purchase the songs of this movie easily via YouTube and Online Play store. In order to make the songs to reach the public easily especially the younger generation, the production crew is playing their major role in social media by actively updating statuses regarding the songs and information about the movie 'Villavan' to make it viral in the social medias.

      As stated by the production crew during the press meet recently, they mentioned that one of the best part about the movie was they had used hi tech modern cameras in this movie which has never been used in our local movies before. Director Vasan proclaimed that golden opportunities were given to the new comers and talented artists to be a part in this movie.



     'Villavan' movie fully filmed with different genre of story while all the technical part of this movie was completed and all set for screening in the big screen soon. The production team and the movie producer Dato Seri Mohana Sundaram give assurance that, 'Villavan - The Vigilante ' will give a wonderful eye treat for the audience.



For more information and updates about the movie kindly click the link stated below to direct yourself to their official facebook page : https://www.facebook.com/villavanthevigilante/

மினி மார்க்கெட்டில் கொள்ளை; கடை உரிமையாளர் 'கொலை'


ஈப்போ-
மினி மார்க்கெட் ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் அக்கடை முதலாளியை கொலை செய்ததோடு 80,000 வெள்ளியை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் இங்கு ஜெலாப்பாங்கிலுள்ள மினி மார்க்கெட்டில் நிகழ்ந்தது.

கடையின் மேல் மாடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கடை உரிமையாளர் செம் ஆ யெம் (வயது 69) உடல் கிடந்தது.

கடையின் கூரையை விலக்கி, கயிறை உபயோகித்து கடையினுள் நுழைந்த கொள்ளையர்கள், ஓர் ஆயுதத்தைக் கொண்டு செம் ஆ யெம்மின் தலைப்பகுதியில் தாக்கியிருக்கலாம் என ஈப்போ ஓசிபிடி துணை ஆணையர் முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து இன்று காலை 8.00 மணிக்குள் இந்த கொலை நடந்திருக்கலாம். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ரத்தம் படிந்த உலோகக் குழாய் ஒன்றை கண்டெடுத்துள்ளோம்.  இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

கொலை செய்யப்பட்ட செம் ஆ யெம் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்தவர் ஆவார்.

உயிரை 'பணயம்' வைத்த சிறுவர்களின் மூன்று மணி நேர பேருந்து பயணம்


பெய்ஜிங்-
பட்டணத்தில் வேலை செய்யும் தங்களது  பெற்றோரை பார்க்க விரும்பிய 2 சிறுவர்கள் பேருந்துக்கு அடியில் பதுங்கி கொண்டு 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

பள்ளியிலிருந்து வெளியேறி பெற்றோரை காண குவாண்டோங் மகாணத்திற்கு செல்ல முயன்ற 8 வயதுடைய இரு சிறுவர்கள், பணம் இல்லாத காரணத்தினால் பேருந்துக்கு அடியில் ஒளிந்து கொண்டனர்.

புறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்போது இரு சிறார்கள் பேருந்துக்கு அடியில் ஒளிந்து கொண்டிருப்பதை ஊழியர்கள் கண்டு அவர்களை மீட்டனர்.

பேருந்துக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் உடல் கரும்புகையும் சேரும் சகதியுமாக இருந்தது. பின்னர் இச்சிறுவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Monday, 27 November 2017

கோலகங்சார் தொகுதி மஇகாவின் தீபாவளி உபசரிப்பு

 கோலகங்சார் தொகுதி மஇகா ஏற்பாட்டில்  மாவட்ட ரீதியிலான தீபாவளி பொது உபசரிப்பு அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் மஸ்துரா சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார். அவர் தமதுரையில், கடந்தாண்டு இடைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்த இந்தியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சமுதாயத்திற்கான என்னுடைய சேவை தொடர்ந்து கொண்டிருக்கும். அவர்களுக்கான சேவையை வழங்க நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன்.

இதனிடையே, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல திட்டங்கள்ம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய சமுதாயத்திற்கான பல திட்டங்களையும் அறிவித்துள்ளார்.  ஆதலால் தேசிய முன்னணிக்கான இந்தியர் ஆதரவு தொடரப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.  கோலகங்சார் தொகுதி மஇகா தலைவர் செல்வராஜா, முன்னாள் தலைவர் டத்தோ பூபாலன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்களும் உதவிநிதியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியது 59ஆம் ஆண்டு பிறந்த நண்பர்கள் இயக்கம்


சுங்கை சிப்புட்-
59ஆம் ஆண்டு பிறந்த அன்பர்கள், அண்மையில் காந்தி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி 46 ஏழை இந்திய மாணவர்களுக்கு சீருடைகளை அன்பளிப்புச் செய்து உதவினர்.

59ஆம் ஆண்டு பிறந்த நண்பர்களின் மூலம்  உதவிகளை திரட்டப்பட்டு இந்த உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 59ஆம் ஆண்டு பிறந்த நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் ஆ.சுந்தரா,  உதவி தலைவர் கி.கருணாகரன்,               பொருளாளர் க.சுகுமாரன், செயலாளர் ச.கணேசன் ஆகியோர் உட்பட இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழுத் தலைவர் தலைமை ஆசிரியர் சி.வீரமுத்து ஆகியோர் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மைபிபிபிக்கு வந்தால் வேள்பாரிக்கு 'செனட்டர்' பதவி - டான்ஶ்ரீ கேவியஸ்


வி.மோகன்ராஜ், ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகாவின் தலைமை பொருளாளராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி மைபிபிபி கட்சிக்கு வந்தால் செனட்டர் பதவியை வழங்குவேன் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்  சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆனால் அத்தொகுதிக்கு பலர் வேட்பாளராக களமிறங்க முயற்சிக்கின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆதரிக்க வேண்டாம் என கூறும் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், 2008இல் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் சாமிவேலு போட்டி போடும்போது 70 வயதுக்கு மேற்பட்டவர் ஆவார். அப்போது அவரை ஏன் போட்டியிட வேண்டாம் என கூறவில்லை?
அத்தொகுதியில் போட்டியிட தனக்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லையேல் அவரது மகன் வேள்பாரிக்காவது தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். இன்று செனட்டர் பதவிக்கும் நாடாளுமன்றத் தொகுதிக்கும் அலை மோதும் நிலையை வேள்பாரி எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்.

இச்சூழலில் மைபிபிபி கட்சிக்கு வேள்பாரி வந்தால் அவருக்கு செனட்டர் பதவியை வழங்குவேன் என அண்மையில் மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின்  மத்திய செயலவைக் கூட்டத்தின்போது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இளைஞர்கள் பலியாவிடக்கூடாது- சுங்கை சிப்புட் இளங்கோ- பகுதி 3


நேர்காணல்: ரா.தங்கமணி
சமூக ஊடகங்களில் உலா வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என நம்பிட முடியாது. ஆளும் அரசாங்கத்தை கவிழ்த்திட எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்யான தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கலாம். ஆனால் அதையெல்லாம் நம்பி தங்களது எதிர்காலத்தை இளைஞர்கள் அடகு வைத்து விடக்கூடாது என சுங்கை சிப்புட்  மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

'பாரதம்' மின்னியல் ஊடகம் அவருடன் நடத்திய சிறு நேர்காணலின் மூன்றாவது தொகுப்பு இங்கே:

கே: இத்தொகுதியிலுள்ள தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் குறித்து?

: இத்தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி விவகாரங்களுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஹீவூட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

டோவன்பி தமிழ்ப்பள்ளிக்கான குத்தகை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பள்ளியின் புதிய கட்டடப் பணி விரைவில் தொடங்கப்படலாம்.  சாலாக் தமிழ்ப்பள்ளிக்கான நிலம் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கே: தேர்தல் நடவடிக்கையை  தொகுதி மஇகா தொடங்கி விட்டதா?

:  தேர்தல் நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது.  வாக்காளரின் நிலையை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆய்வின் முடிவுக்கேற்ப வாக்கு வங்கியை அதிகப்படுத்து மக்களின் ஆதரவை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்.
கே: இளம் வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

: வரும் பொதுத் தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது இளம் வாக்காளர்களே ஆவர். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவதால் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இதற்கு கடந்த 9 ஆண்டுகால ஆட்சியே உதாரணமாகும். இந்த காலகட்டங்களில் இத்தொகுதி மக்கள் சந்தித்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சமூக ஊடகங்ளில் வெளிவரும் பல்வேறு தகவல்கள் உண்மையில்லாதவையாகும். ஆதலால் உண்மை எது, பொய் எது என்பதை தீர ஆராய்ந்து இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்.
-முற்றும்-

Sunday, 26 November 2017

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் பிரதமரையும் மஇகா தலைவரையும் ஆதரிக்கக்கூடாதா? - டான்ஶ்ரீ கேவியஸ் கேள்வி

வி.மோகன்ராஜ்

கோலாலம்பூர்-
60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆதரிக்க வேண்டாம் என கூறும் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும்  மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சுப்பிரமணியமும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை மறந்து விட்டாரா? என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கேள்வி எழுப்பினார்.

'கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆதரிக்க வேண்டாம்; துடிப்புமிக்க ஓர் இளைஞருக்கு ஆதரவு வழங்குங்கள்' என மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ள டத்தோ சரவணன், நாட்டின் பல்வேறு தலைவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

கடந்த 2008ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துன் (டத்தோஶ்ரீ) சாமிவேலுகூட அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்தான்.  அவரை போட்டியிட வேண்டாம் என ஏன் அப்போது தடுக்கவில்லை? நாட்டின் பிரதமரும் மஇகா தலைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதை மறந்து பேச வேண்டாம் என டத்தோ சரவணனிடம் கூறிக் கொள்கிறேன்.

கேரமன் மலை தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் முடிவெடுத்து விட்டேன். எக்காரணம் கொண்டும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என நேற்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின்போது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

'ஹி.மு.- ஹி.பி.' - அத்தியாயம் -1 (ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களின் உரிமை சித்தாந்தம்)


ஆக்கம்:புகழேந்தி

(இந்த கட்டுரையில் இடம்பெறும் தகவல்கள் நாளிதழ், இணைய ஊடகங்களின் செய்திகள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).

கோலாலம்பூர்-

'நவம்பர் 25'- இந்த நாளை மலேசிய அரசியல் சித்தாந்தம் ஒருபோதும் மறந்து விடவும் முடியாது, ஒதுக்கி வைக்கப்படவும் முடியாது. இதே நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் உரிமைப் போராட்டம் அரசியல் நிலைத்தன்மையில் கோலோச்சிய கூட்டமைப்பின் சாம்ராஜியத்தை ஆட்டம் காண செய்தது.

'மலேசியா'.... உலக நாடுகளின் பார்வையில் வளர்ந்து வரும் நாடாகவும் பல இன மக்கள் சேர்ந்து வாழ்ந்த போதிலும் எவ்வித இனம், மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையை நிலைநாட்டுகின்ற ஒரு நாடாகவும் புகழ் பெற்று விளங்கியது.

ஆனால் அத்தகைய நாட்டில் வளர்ச்சி பாதையில் காலுன்ற வேண்டிய ஒரு சமுதாயம் புறக்கணிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டு வருவதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த இனம் எழுச்சி கண்ட நாளே 'நவம்பர் 25'.

ஆம்... அதுதான்  மலேசிய அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்த 'ஹிண்ட்ராஃப்' பேரணியாகும்.  ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட இந்திய சமுதாயம் தனது உரிமைக்காக ஒன்றுகூடி குரலெழுப்பி வீதி போராட்டம் நடத்தி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

5 தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயத்தையே  ஒன்று திரட்டி வீதிப் போராட்டத்தை நடத்தியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.  தான் ஏமாற்றப்பட்டோம்; ஏமாற்றப்படுகிறோம் என அறிந்த இந்திய சமுதாயத்தின் கொந்தளிப்பில் உருவான இந்த உரிமை எழுச்சி போராட்டத்தை இதற்கு முன் மலேசிய திருநாடு கண்டதில்லை எனலாம்.

கட்டுக் கடங்காத கூட்டம், திரும்பும் திசையெல்லாம் இளைஞரணி பட்டாளம் என ஹிண்ட்ராஃப் பேரணியில் ஒன்று திரண்டு ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்தியர்களுக்கு கிடைத்தது ரசாயன நீர் பாய்ச்சலும், கண்ணீர் புகை குண்டுகளும் , 'எஃப்ஆர்யூ' அதிகாரிகளின் அடியும், கைதும், நீதிமன்ற வழக்குகளும் தான்.

ஓர் இனத்தின் எழுச்சிக் குரலாக உருவெடுத்த ஹிண்டராஃப் பேரணியின் தாக்கம் அடுத்த நான்கு மாதங்களில் நடந்தேறிய 12ஆவது பொதுத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வலுவான அதிகாரத்துடன் ஆட்சி புரிந்த தேசிய முன்னணிக்கு 'மரண அடி'யை கொடுத்து பல இறுமாப்புடன் திரிந்த பல தலைவர்களை தோற்கடிக்கச் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்த 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் பல திசைகளில் பயணித்து இன்று அதன் தடத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது பரிதாபத்திற்குரியதாகும்....
                                                                                                   - நாளை தொடரும்-

("ஹிண்ட்ராஃப் போராட்டம் எப்படி உருவானது, அதை வழிநடத்திய தலைவர்கள் யார், ஹிண்ட்ராஃப் போராட்டம் பூதாகரமாக வெடிக்க காரணம் என்ன, அதனால் ஏற்பட்ட பின்னடைவு என்ன?" போன்ற விவரங்களை நாளைய தொடரில் காண்போம்".)

கணபதி ராவ் புதல்வி ஜனனி பள்ளியின் சிறந்த மாணவியாக தேர்வு

கோ.பத்மஜோதி

கிள்ளான்-
அண்மையில் வெளிவந்த யூபிஎஸ்ஆர் தேர்வு  முடிவில்  சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் புதல்வி ஜனனி கணபதி ராவ் 7, 1 பி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

கிள்ளான், எமரால்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இவர் அப்பள்ளியின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தன் பிள்ளையின் இந்த வெற்றிக்கு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் பெருமை கொள்வதாகவும் கணபதி ராவ் தெரிவித்தார்இவருடைய இந்த வெற்றி,  மற்ற மாணவர்களையும் தமிழ்ப்பள்ளியிகளில் சேர்க்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறது என  அவர் குறிப்பிட்டார்.

Saturday, 25 November 2017

"மக்களுக்கான வேட்பாளரை களமிறக்குவதுதான் வெற்றியை உறுதி செய்யும்" - சுங்கை சிப்புட் இளங்கோ- பகுதி - 2

நேர்காணல்: ரா.தங்கமணி

மக்கள் விரும்பும் வேட்பாளரை களமிறக்குவதில்தான் தேசிய முன்னணியின் வெற்றி அடங்கியுள்ளது. அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்பாளரை  அடையாளம் கண்டு களமிறக்க வேண்டியது அவசியமாகும் என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

''பாரதம்" மின்னியல் ஊடகத்துடனான இளங்கோவனுடனான நேற்றைய நேர்காணலின் தொடர்ச்சி இது...

கே: 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றியை உறுதி செய்யும் வேட்பாளர் யார்?

: இத்தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் வேட்பாளர் யார்? என ஆராய்வதை விடை வெற்றியை தக்கவைத்துக் கொள்வது மிக முக்கியமானதாகும்.
வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைத்துவம் அடையாளம் கண்டு சமூகச் சேவையின் வழி மக்களை அணுக வேண்டும். மக்களிடையேயான நெருக்கமும் தொடர்பும்தான் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும்.

ஏனெனில் இங்கு மக்கள் சேவைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு வேட்பாளரை களமிறக்கி சேவையாற்ற வேண்டும்.
கே: திரளாக அணிவகுக்கும் உள்ளூர் வேட்பாளர்கள் குறித்து?

:  உள்ளூர் வேட்பாளர் இத்தேர்தலில் களமிறக்கப்படும் சூழல் வெற்றிக்கு சாத்தியமான ஒன்றுதான். ஆயினும் அதனை கட்சி தலைமைத்துவம்தான் முடிவு செய்ய வேண்டும். உள்ளூர் வேட்பாளராக பலர் களமிறங்கியுள்ள போதிலும் மக்களின் சேவையை முன்னெடுக்கின்றனர். அதனை தொகுதி மஇகா வரவேற்கிறது. வெற்றியை வாய்ப்பை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

மக்கள் விரும்புபவரையே தேசிய முன்னணி வேட்பாளராக களமிறக்கும் என கூறப்படும் வேளையில் அதனை தொகுதி மஇகா வரவேற்கிறது.

கே: தொகுதி தேசிய முன்னணி தலைவர் பதவி மஇகாவிடமிருந்து பறிபோனது பற்றி...?

: தொகுதி தேமு தலைவர் பதவி ம இகாவிடமிருந்து ஒருபோதும் பறிபோகவில்லை. கடந்த இரு தவணைகளாக இத்தொகுதியில் தேமு வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர். ஆனால் லிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் அம்னோ வேட்பாளர் வெற்றி பெறுகிறார்.
இம்முறை தேமு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் இப்பதவியை அம்னோ கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தல்களில் நாம் ஓர் அமைச்சரையும் ஒரு துணை அமைச்சரையும் இழந்து விட்டோம். இத்தகைய சூழலில் தேமு தலைவர் பதவி விட்டுக் கொடுத்ததை பெரிய விவகாரமல்ல.

இத்தொகுதியில் தேமு  மீண்டும் வெற்றி பெற்றால் அந்த பதவி நாளை மீண்டும் மஇகாவிடமே திரும்பும்.
- தொடரும்-

இப்பவும் சொல்லுறேன்... நான்தான் 'கேண்டிடேட்'- டான்ஶ்ரீ கேவியஸ் சவால்


கோலாலம்பூர்-

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் நானே. அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் உறுதிப்பட கூறினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்  மலை தொகுதியில் களமிறக்கப்படும் வேட்பாளர் நான்தான் என கூறியே மக்களுக்கு சேவையாற்றினேன்.

ஆனால் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ், ஒருங்கிணைப்பாளர் என கூறியே களமிறங்கினார். ஆனால் இப்போது நான்தான் வேட்பாளர் என கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு  கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிவராஜ், நான்தான் வேட்பாளர் என்பதை உறுதியாக கூற முடியுமா?

'இப்பவும் சொல்லுறேன்.. நான்தான் கேமரன் மலையில் களமிறங்கும் தேமு வேட்பாளர்' என்று  மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு தெரிவித்தார்.

பிரிம் உதவித் தொகை: நவ.27 முதல் பதிந்து கொள்ளலாம்


கோலாலம்பூர்-
பிரிம் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தையும் புதுப்பித்தலையும் வரும் திங்கட்கிழமை 27ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப்த்தை  https://ebr1m.hasil.gov.my.   என்ற 'பிரிம்' அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என நிதியமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இவ்வாண்டு நவம்பர் 27 முதல் டிசம்பர் 31ஆம் தேதி புதிய விண்ணப்பம், புதுப்பித்துக் கொள்ளலாம்.

கடந்த முறை 'பிரிம்' உதவித் தொகையை பெற்றவர்கள் மரணித்திருந்தால் அவர்களது கணவன்/ மனைவி  2018க்கான பிரிம் உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதோடு, ஏற்கெனவே பதிவு செய்து கொண்டவர்கள் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் தங்களது தகவல்களை புதுபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பிரிம் உதவித் தொகை குறித்து எவ்வித அறிக்கையையும் வாட்ஸ் அப், சமூக ஊடகங்களில் நிதியமைச்சு வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ தகவல்கள் https://ebr1M.hasil.gov.my. என்ற அகப்பக்கத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.

வறுமை கோட்டில் வாழும் மக்களை 2018க்கான பிரிம் உதவித் தொகை சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

2018க்கான பட்ஜெட் தாக்கலின்போது 1,200 வெள்ளி தொகை எவ்வித மாற்றமும் இன்றி அடுத்தாண்டும் தொடரப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இரு தலைவர்களின் தோல்வி; மக்களுக்கே பெரு நஷ்டம்' - சுங்கை சிப்புட் இளங்கோ- பகுதி - 1


நேர்காணல்: ரா.தங்கமணி

மலேசியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த தொகுதியாக திகழ்வது சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதியில் போட்டியிட்ட ஓர் அமைச்சரையும் ஒரு துணை அமைச்சரையும் தோற்கடித்ததன் விளைவுதான் இன்று வறுமையில் உழன்றுள்ள மக்களின் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்ட முடியாத சூழல் நிலவுகிறது என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

'பாரதம்' மின்னியல் ஊடகம் அவருடன் நடத்திய சிறு நேர்காணலின் தொகுப்பு இங்கே:

கேசுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து உங்களின் சேவை?

: இத்தொகுதியின் மஇகா தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கான பல்வேறு சமூக நடவடிக்களை மேற்கொண்டு வருகிறோம். இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுதான்.

கடந்த 9 ஆண்டுகளாக இத்தொகுதி எதிர்க்கட்சி வசம் உள்ளது. மானியம் ஏதும்  இல்லாத காரணத்தினால் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஓர் இக்கட்டான சூழலாக உள்ளது.

கே: கடந்த இரு பொதுத் தேர்தல்களில் தேமு வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது பற்றி?

: பொதுத் தேர்தல்களில் வெற்றி, தோல்வி என்பது மக்களின் முடிவில் உள்ளது. தங்களுக்கான மக்கள் பிரதிநிதி யார் என்பதை தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு. ஆனால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளர் தோல்வி அடைந்தது ஒரு பின்னடைவு ஆகும்.

ஏனெனில் இங்கு தோற்றுபோனது சாதாரண வேட்பாளர்கள் அல்லர். ஓர் முழு அமைச்சர் பதவியை வகித்துக் கொண்டிருந்தவரும் ஒரு துணை அமைச்சர் பதவியை வகித்துக் கொண்டிருந்தவருமாவர். அவர்களின் தோல்வி 'மக்களுக்கே பெரு நஷ்டம்'.

கே: தற்போது மக்கள் நாடுவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரையா? மஇகாவையா?

: கடந்த 9 ஆண்டுகளாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்கிறார். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை என்பது உலக நடைமுறையாகும். எதிர்க்கட்சிக்கு மானியம் வழங்க முடியாததால் சேவையை எப்படி வழங்க முடியும்?

மஇகாவினால் மட்டுமே சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி, வறுமை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு பொது இயக்கங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் சேவைகள் தொடரப்படுகின்றன.

சுங்கை சிப்புட்டில் 9 ஆண்டுகளாக எதிர்க்கட்சி ஆட்சி புரிந்தாலும் மக்கள் நாடி வருவது மஇகாவை தான். அதை யாரும் மறுக்க முடியாது.

கே: எதிர்க்கட்சியிடமிருந்து இத்தொகுதியை மீட்டெடுக்க எத்தகைய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

: எதிர்க்கட்சி வசமுள்ள  இத்தொகுதியை தேமு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், பேராக்  மஇகா சார்பில் தங்கராஜு ஆகியோரை கொண்டு தேர்தல் நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இளைஞர், மகளிர் பிரிவினரும் களமிறங்கி மக்களை சந்திக்கின்றனர்.

ஆலயம், பொது இயக்கங்களுக்கு அக்டோபரில் 120,000 வெள்ளிக்கான மானியங்கள் வழங்கப்பட்டன. இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டு, சீரமைப்புக்காக 600,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தோல்வி அடைந்த போதிலும் 25 லட்சம் வெள்ளி மதிப்புடைய அடிப்படை தேவைகளை (பொது மண்டபம், திடல், சாலை சீரமைப்பு) பூர்த்தி செய்யும் வேலைகளை முன்னெடுக்கப்பட்டு தற்போது 90% பணிகள் பூர்த்தியாகிவிட்டன.

தேசிய முன்னணி ஒன்றுதான் நாடாளுமன்ற, சட்டமன்ற  செயலவை அமைத்துள்ளது. தொகுதி மக்களுடன் சந்திப்பு நடத்தி பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு கண்டு வருகிறோம்.

-நாளை தொடரும்...-

Friday, 24 November 2017

மலேசியாவில் கலைஞானி கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி உள்ளுர் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம்!


ஆல்சீஸன் இவண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பிரைதேக்ஸ் எண்டர்பிரைஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அஸ்ராஃப் மற்றும் குணசீலன் ஏற்பாட்டில் தென்இந்தியா சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனின் என் இனிய பொன் நிலாவே' எனும் இசை நிகழ்ச்சி நம் நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மைசூரி குழுமம் இந்நிகழ்வின் முதன்மை ஆதரவாளர்களாவர். திரைகேன் பையிண்ட் மற்றும் ஜிஹேவா இந்தேரியர்ஸ் இணை ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் உள்ளூர் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக வெளியீடு கண்ட வேட்டை கருப்பர் ஐயா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜிகேவின் பிளாக் ஹாந்தேர்ஸ் நிறுவனமும் உள்ளுர் இசையமைப்பாளர் கேஷ் வில்லன்ஸ் இந்நிகழ்விற்கு முழு ஆதரவை வழங்குகின்றனர் என்பதனை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அஸ்ராஃப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


இந்நிகழ்வில், இசைஞானி இளையராஜா - கலைஞானி கங்கை அமரன் இசைப் பயணங்கள் எனும் கருப் பொருளோடு இந்த நிகழ்வு முதன் முறையாக மலேசியாவில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில், கலைஞானி கங்கை அமரன் அவர் தம் ஜென்டில்மென் அர்கெஸ்ட்ரா இசை குழுவினர்களும் தமிழகத்தைச் சேர்ந்த பல பாடகர்களும் சினிமா பின்னனி பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், உள்ளூர் பாடகர்களும் கலந்துச் சிறப்பிக்கவுள்ளனர்.

இதனிடையே, உள்ளுர் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களில் ஒருவரும் பிரைடெக்ஸ் நிருவனத்தின் உரிமையாளருமான குணசீலன் தெரிவித்தார்.


இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக கிள்ளான், புக்கிட் திங்கியிலுள்ள யாயாசன் செரிபு ஹாராப்பான் கருணை இல்லத்திற்கு இதன் வழி கிடைக்கப்பெறும் நிதியின்  ஒரு பங்காக 25% நிதியை வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


இதன் செய்தியாளர் சந்திப்பு தலைநகரிலுள்ள சோமா அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் திரைகன் பையிண்ட் நிர்வாகி கணேசன், டாக்டர் புருசோத்தமணன், தூவான் காசிம், இளங்கோவன் மற்றும் சிறப்பு பிரமுகர்களும் செய்தியாளர்களும் கலந்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்வை மக்கள் ஒசை நிருபரும் உள்ளூர் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜெயசீலன் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து மேல் விவரங்களுக்கு, 016-6191786 அல்லது 0143271310 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

அஜித்- சிவா கூட்டணியின் 'விசுவாசம்'

சென்னை-
'விவேகம்' படத்தை தொடர்ந்து அஜித்- சிவா கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு 'விசுவாசம்' என பெயரிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' என அஜித்குமார்- இயக்குனர் சிவா கூட்டணியில் உருவான திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்ததோடு வசூலையும் வாரி குவித்தன. 'வி' பட வரிசை வெற்றி தரும் வேளையில்  இந்த 'விசுவாசம்' அமைந்துள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு  தீபாவளிக்கு திரையீடு காணவுள்ளது.

இரட்டை இலை: இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே

சென்னை-
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை  இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தினகரன் என மூன்று அணிகளாக பிரிந்தது அதிமுக.

கட்சி சிதறியதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது  இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், அச்சின்னத்தை  யாருக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு வழங்கப்படும் என கூறியுள்ளதாக தெரிகிறது.
இத்தகவலை எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பக்கமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தடம் புரண்டது சரக்கு ரயில்- சேவைகள் பாதிப்பு


கோலாலம்பூர்-
சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் கிள்ளான் பள்ளதாக்கு  முழுவதுக்குமான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5.00 மணியளவில் பேங்க் நெகாரா நிலையத்தில் 12பெட்டிகளைக் கொண்ட ரயில் தடம் புரண்டதால் பேங்க் நெகாரா, புத்ரா, சிகாம்புட் ஆகிய நிலையங்களுக்கான சேவை இடம்பெறவில்லை.

ஆதலால் எம்ஆர்டி, எல்ஆர்டி ஆகிய ரயில் சேவைகளை பயன்படுத்துமாறு பயணிகளை இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பத்துகேவ்ஸ்-கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு பயணம் செய்யும் பயணிகள் செந்தூல் நிலையம் முன்பு நிற்கும் பேருந்துகளின் மூலம் கேஎல் சென்ட்ரலுக்கு செல்லலாம்.

இதனை சீரமைக்க மூன்று நாட்கள் பிடிக்கும் என டிவிட்டர் அகப்பக்கத்தின் மூலம் கேடிஎம் தெரிவித்துள்ளது.

யூபிஎஸ்ஆர் முடிவுகள்: ஊடகங்களிடம் தெரிவிக்க பள்ளிகளுக்கு கட்டுபாடு


ரா.தங்கமணி

ஈப்போ-
யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளை ஊடகங்களிடம் அறிவிக்க பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தேர்வு முடிவுகளை சேகரிக்க முடியாத அவலநிலைக்கு ஊடகத்தினர் தள்ளப்பட்டனர்.

ஒவ்வோர் ஆண்டும்  யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் தத்தம் பள்ளிகளின் ஊடகங்களிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இவ்வாண்டு தங்களது பள்ளி தேர்வு முடிவுகளை  ஊடகங்களிடம் அறிவிக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களிடையே காணப்படும் தாழ்வு மனப்பான்மை நிலையை தவிர்ப்பதற்காக இத்தகையதொரு நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது என இந்த கட்டுபாடுக்கு காரணம் கூறப்படுகின்றது.

'முடிவு எதுவாக இருந்தாலும்....'- பிரதமர் நஜிப் வாழ்த்து

கோலாலம்பூர்-
இன்று வெளியாகியுள்ள யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளை பெறும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

'உங்களது முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை; பெரிதும் உதவி புரிந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி கூற மறக்க வேண்டாம்' என சமூக ஊடகத்தின் வாயிலாக மாணவர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

டத்தோ சோதிநாதன்- சுங்கை சிப்புட் வேட்பாளரா?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மஇகாவின்  முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கக்கூடும் என பரபரப்பான தகவல் இங்கு உலாவிக் கொண்டிருக்கின்றது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குபவர் யார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது புதிய தகவலாக டத்தோ சோதிநாதன் பெயர் உலாவுகின்றது.

இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவுடன் நெருக்கமானவராக திகழ்ந்த டத்தோ சோதிநாதன், முன்னாள் துணை அமைச்சராகவும் பதவி வகித்தவராவார்.

13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மஇகாவில் நிலவிய  உட்பூசலினால் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் அணியில் இருந்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

மஇகாவின் தலைவராக பதவியேற்றப் பின்னர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் மேற்கொண்ட நடவடிக்கையினால் சுப்ரா அணியில் இணைந்து கொண்ட டத்தோ சோதிநாதனும் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவ்வகையில் துன் சாமிவேலுவுடன் இருந்த காரணத்தினால் சுங்கை சிப்புட் மக்களுக்கு நன்கு அறிமுகமான டத்தோ சோதிநாதன் இத்தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.