Saturday 28 October 2017

'மெர்சல்': வசனங்களால் என்ன பாதிப்பு? - நீதிபதிகள் கேள்வி

சென்னை-
தீபாவளிக்கு திரையீடு கண்ட 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்தியா அளவில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியாவை உள்ளடக்கிய வசனங்கள் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது.

இந்த வசனங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட வேளையில் அதனை விசாரித்த நீதிபதிகள், 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்களால் பொது மக்களுக்கு என்ன பாதிப்பு உள்ளது?, 'மெர்சல்' ஒரு திரைப்படம் மட்டுமே; அது நிஜவாழ்க்கை அல்ல, மனுதாரருக்கு பொதுநல அக்கறை இருந்திருந்தால் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்றவற்றை எதிர்த்திருக்கலாமே?, என கேள்வி எழுப்பியதோடு, கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என  கூறியுள்ளனர்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா என பலர் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இடம்பெற்ற வசனங்களை தமிழக பாஜகவினர் எதிர்த்ததன் விளைவாக அது இந்திய அளவில் பேசப்படும் படமாக மாறியுள்ளது.

No comments:

Post a Comment