Sunday 8 October 2017

தேமு பங்காளி கட்சியாக ஐபிஎப்'- தித்திக்கும் அறிவிப்பை வெளியிடுவாரா நஜிப்?


ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
தேசிய முன்னணியின் ஒரு பங்காளி கட்சியாக ஐபிஎப் கட்சி இணைத்துக் கொள்வதற்கான தித்திப்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி கிடக்கிறது.

கடந்த 27 ஆண்டுகளாக தேசிய முன்னணியின் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக  இணைவதற்கு ஐபிஎப் கட்சி காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் அது 'நிராசையாகவே' நீண்டு கொண்டிருக்கிறது.

ஐபிஎப் கட்சியின் 25ஆவது பேராளர் மாநாடு நாளை 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்  'தித்திப்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பெரிதும் எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர்  செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியில் உள்ள அம்னோ கட்சி உட்பட 12 கட்சிகள் தேசிய முன்னணியில் ஒரு பங்காளி கட்சியாக ஐபிஎப் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகா மட்டுமே இன்னும் தடையாக உள்ளது.

தேமுவில் ஐபிஎப் இணைத்துக் கொள்வதற்கு சம்மதம் என கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் டத்தோஶ்ரீ நஜிப் கூறியிருந்தார். ஆனால் மஇகாவின் கதவடைப்பினால் இன்னும் இது சாத்தியம் ஆகாமல் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியத்திடம் இது குறித்து பேசியபோது, கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள், நாங்கள் அதுகுறித்து பரிசீலிக்கின்றோம் என கூறினார்.

ஒவ்வொரு தேர்தல் காலகட்டங்களின்போதும் தேசிய முன்னனியின் வெற்றிகாக பாடுபடும் ஐபிஎப் கட்சி,  தேசிய முன்னணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இணைத்துக் கொள்வதற்கான  இனிய தருணத்தை 'இளவு காத்த கிளி போல' காத்துக் கொண்டிருக்கும் எங்களின் எதிர்பார்ப்புக்கு  பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தித்திக்கும் அறிவிப்பு வெளியிடுவாரா? என ஐபிஎப் மாநாடு காத்துக் கொண்டிருக்கிறது என டத்தோ சம்பந்தன் தெரிவித்தார்.

ஐபிஎப் கட்சி இலக்கான செனட்டர் பதவி அண்மையில் டத்தோ சம்பந்தனுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நிலையில், தேமுவில் ஒரு பங்காளி கட்சியாக ஐபிஎப் உருவெடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

No comments:

Post a Comment