Tuesday 3 October 2017

'9ஆம் தேதி வரை காலக்கெடு; இல்லையேல் பேரணி'- வீ. சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மாணிப்புப் பணி வரும் 9ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படவில்லையென்றால் பேராக் மாநில அரசு செயலகத்தின் முன்பு மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இப்பள்ளிக்கான புதிய கட்டடம்  நிர்மாணிக்கப்படும் என மத்திய அரசாங்கம் 2010ஆம் ஆண்டிலேயே தெரிவித்திருந்த போதிலும் இன்று வரையிலும் அதற்கான அடிச்சுவட்டை காணமுடியவில்லை.
இந்த பள்ளி நிர்மாணிக்கப்படும் நிலம் அடிக்கடி சுத்தம் செய்யும் போதெல்லாம் நிர்மாணிப்புப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது என கூறப்படுகிறது. இது மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் கையாளும் புது யுக்தியாகும்.

இப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் உண்மையிலேயே எண்ணம் கொண்டுள்ளதா? என்பது தெரியவில்லை. இப்பள்ளி விவகாரத்தை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

குனோங் ராப்பாட் பள்ளி புதிய கட்டடம் தொடர்பில் மக்களவையில் கேள்வி எழுப்பும்போதெல்லாம் துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் கூறியுள்ள இறுதி பொய் கடந்த 28.9.2017இல் பள்ளி கட்டட நிர்மாணிப்புப் பணி தொடங்கும் என்பதுதான். ஆனால் இன்று அதற்கான அடிமட்ட வேலை எதுவுமே தொடங்கப்படவில்லை.
இன்னும் எதற்காக காத்திருக்க வேண்டும்? ஒரு திட்டம் காலதாமதம் ஆகுவதற்கு ஒரு ஏஜென்சி இன்னும் எவ்வளவு காரணங்களைத்தான் அடுக்கும்?

வரும் 9ஆம் தேதிக்குள் இப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியை தொடங்கவில்லையென்றால் மாநில அரசு செயலகத்தின் முன்பு மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என பேராக் மாநில பக்காத்தான் ஹராப்பானின் செயலாளருமான சிவகுமார் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment