Friday 27 October 2017

2019இல் திறக்கப்படுமா குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம்? - சிவகுமார் கேள்வி

ரா.தங்கமணி

ஈப்போ-
பல்வேறு சர்ச்சைகளுக்கும் கருத்து மோதல்களுக்கும் வித்திட்ட குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடப் பணிக்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பள்ளியின் புதிய கட்டடத்தை 2019ஆம் ஆண்டு ஜனவரியில் திறந்து விடுங்கள் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பெரும் இழுபறியில் நீடித்து வந்த குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணிப்புப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதை வரவேற்கிறேன். காலதாமதம் என்றாலும் நிர்மாணிப்புப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது ஆக்கப்பூர்வமானதாகும்.

28/9/2017இல் இந்த பள்ளி கட்டடத்தின் பணி தொடங்கப்பட்டு 12/9/2018இல் நிர்மாணிப்புப் பணி முழுமை பெறும் என அங்குள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2019இல் இந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு மாணவர்கள் இங்கு பயில்வர் என நம்பிக்கை கொண்டுள்ளோம். மேற்குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து இன்னும் மூன்று மாத கால அவகாசம் உள்ளது. அதற்குள் இந்த பள்ளியின் அனைத்து அடிப்படை வேலைகளையும் பூர்த்தி செய்து 2019இல் இந்த பள்ளிக்கூடத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடுங்கள்.

ஏனெனில் நிர்மாணிப்புப் பணிகள் முடிந்த பின்னரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னரே டேசா பிஞ்சி புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
அதேபோன்று அரசினர் தமிழ்ப்பள்ளியின்  இணைக் கட்டடம்  நிர்மாணிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் திறக்கப்படாமலே இருக்கிறது.

இத்தகைய நிலை குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்படக்கூடாது. அவ்வகையில் 2019ஆம் ஆண்டில் இப்பள்ளியின் புதிய கட்டடம் திறக்கப்படுவதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment