Thursday 7 September 2017

ஜசெக- பிஎஸ்எம் மோதல்? வெற்றி வாய்ப்பு சிதறலாம்

ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக (டிஏபி), பிஎஸ்எம் கட்சிகளுக்கிடையில் மிகப் பெரிய போராட்டம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்எம் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வரும் பொதுத் தேர்தலின்போது ஜசெக தனது வேட்பாளரை களமிறக்கும் என அதன் பேராக் மாநிலத் தலைவர் ஙா கோர் மிங் அறிவித்துள்ளார்.

ஜசெகவின் பல தொகுதியில் பிஎஸ்எம் கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் ஜசெக இந்த நிலைபாட்டை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியாக உணரப்படுகின்ற ஜசெகவும் பிஎஸ்எம் கட்சியும் தொகுதி உடன்படிக்கையில் மாறுபட்ட கருத்தைக் கொண்டு தேர்தலில் களமிறங்குமானால் இவ்விரு கட்சிகளுமே தோல்வி காணக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்த மாறுபட்ட கருத்து தேசிய முன்னணிக்கு சாதகமாக அமைகின்ற சூழலில் 'புத்ராஜெயாவை கைப்பற்றுவோம்' என்ற பக்காத்தான் ஹராப்பானின் கொள்கை தவிடுபொடியாக்கப்படும் என்பதை மேல்நிலை தலைவர்கள் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற பிஎஸ்எம் கட்சியின் மாநாட்டில் 20 தொகுதிகளில் வேட்பாளரை களமிறக்குவோம் என அறிவிக்கப்பட்டது. அதில்  பத்துகாஜா, ஜெலாப்பாங், புந்தோங், மெங்களம்பு, துரோனோ, மாலிம் நாவார் போன்ற பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் ஜசெக ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் ஆகும்.

No comments:

Post a Comment