Saturday, 9 September 2017

“சாமிவேலுவுக்கு 'துன்' பட்டம்- மாபெரும் கௌரவம்” – டத்தோஶ்ரீ சுப்ரா

கோலாலம்பூர்-
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் வி அவர்களிடமிருந்து ‘துன்’ விருதைப் பெற்றுக் கொண்ட மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்து மரியாதை செய்த டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், இது இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்த மாபெரும் கௌரவம்  என வர்ணித்தார்.

“சுதந்திரத் தந்தையான துன் சம்பந்தனுக்கு மட்டுமே இந்தியத் தலைவர்களில் கிடைத்திருந்த துன் விருது அவர் 1979-ஆம் ஆண்டில் மறைந்த பின்னர் சுமார் 38 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் துன் சாமிவேலுவுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே இது இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட மாபெரும் கௌரவமாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்” என்று சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.

“நாட்டின் பொதுப் பணி அமைச்சராகப் பல்வேறு ஆண்டுகள் பணியாற்றியதோடு, மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய பெருமையை ஒருபுறமும், 31 ஆண்டுகள் மஇகாவின் தேசியத் தலைவர் என்ற பெருமையை ஒருபுறமும் கொண்டிருக்கும் சாமிவேலுவின் நீண்ட நெடிய பொதுச் சேவைப் பயணத்திற்குக் கிடைத்திருக்கும் பொருத்தமான விருதாகும்.

மேலும் எம்ஐஇடி உருவாக்கம், ஏய்ம்ஸ்ட் கல்லூரி நிர்மாணிப்பு, டேப் கல்லூரி வளர்ச்சி என்பது போன்ற முனைகளிலும் துன் சாமிவேலு இந்திய சமுதாயத்திற்கு ஆற்றியிருக்கும் சேவைகள் அளப்பரியதாகும். எனவே, இது மஇகாவுக்கு வழங்கப்பட்ட ஓர் அங்கீகாரமாகவும், சிறப்பாகவும் நான் கருதுகிறேன்.

தற்போது அவர் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து, இந்திய சமுதாயத்திற்கும், அரசாங்கத்திற்கும் தனது சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வர வேண்டுமெனவும் வாழ்த்தி, இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

டத்தோஸ்ரீ உத்தாமா என அழைக்கப்பட்டவர் இனி 'துன்' என்று அழைக்கப்படவிருக்கும் நிலையில், 'தோ புவான்' என அழைக்கப்படவிருக்கும் அவரது துணைவியார் 'டத்தின்ஶ்ரீ' இந்திராணிக்கும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment