Friday 8 September 2017

இழப்பதற்கு ஒன்றுமில்லை; வேட்பாளரை களமிறக்குவோம் - சிவநேசன்

ரா,தங்கமணி

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மிகவும் பிரபலமான இந்திய வேட்பாளரை ஜசெக கட்சி களமிறக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

1974இல் முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கியது ஜசெக. அப்போதுதான் டத்தோஶ்ரீ சாமிவேலுவும் தேர்தலில் முதன் முதலாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பி.பட்டு போட்டியிட்டார். அப்போதைய தேர்தலிலேயே 664 வாக்குகள் வித்தியாசத்தில்தான் டத்தோஶ்ரீ சாமிவேலு வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் பல  தவணைகளாக ஜசெக போட்டியிட்டு வந்துள்ளது. 2004ஆம் ஆண்டு வரை ஜசெக போட்டியிட்டுள்ளது. இறுதியாக 2004ஆம் ஆண்டில் டத்தோஶ்ரீ சாமிவேலுவை எதிர்த்து கெ அடிலான் சின்னத்தில் டாக்டர் மைக்கல் ஜெயகுமாரும் ஜசெக சின்னத்தில் வழக்கறிஞர் பொன்முகமும் போட்டியிட்டனர்.
2008ஆம் ஆண்டு ஜசெக விட்டுக் கொடுத்ததன் காரணமாக கெ அடிலான் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ஜெயகுமார் டத்தோஶ்ரீ சாமிவேலுவை தோற்கடித்து நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008இல் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஓர் அரசியல் சுனாமியாகும். இதில் எதிர்க்கட்சியில் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றனர். ஆதலால் அந்த சுனாமியில் கிடைக்கப்பெற்ற வெற்றியை தனது வெற்றி என டாக்டர் ஜெயகுமார் கூறி கொள்ள முடியாது.

14ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக இத்தொகுதியில் போட்டியிடுவதால் நிலவும் மும்முனைப் போட்டியால் தேசிய முன்னணி வெற்றி பெறுமானால் அதனால் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

இதுவரை அத்தொகுதியில் வெற்றி பெறாத ஜசெக மீண்டும் இங்கு தோல்வியை சந்திப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் ஒரேயொரு தொகுதியை மட்டும் கொண்டுள்ள பிஎஸ்எம் கட்சி இங்கு தோல்வி கண்டால் இழப்பு அவர்களுக்கு தானே தவிர எங்களுக்கில்லை.

வரும் பொதுத் தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலமான வேட்பாளரை ஜசெக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கும். வெற்றி பெறுவதும் தோல்வியை தழுவுவதும் மக்கள் அளிக்கும் தீர்ப்பிலே உள்ளது என சிவநேசன் கூறினார்.

No comments:

Post a Comment