Thursday 14 September 2017

தீபாவளி பெருநாளின்போது 'மலேசியா தினக் கொண்டாட்டமா'? - துணை முதல்வர் சாடல்

-சுகுணா முனியாண்டி

பினாங்கு-
தீபாவளிக்கு பின்னர் இரண்டாவது நாளில் 'மலேசியா தினக் கொண்டாட்டத்தை' நம்பிக்கைக் கூட்டணி ஏற்பாடு செய்திருப்பது இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காத வகையில் அமைந்துள்ளது என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கடுமையாக சாடினார்.

நம்பிக்கைக் கூட்டணியில் பேசப்பட்ட இந்தியர் பிரதிநிதித்துவப் பிரச்சினைக்கே இன்னமும் முழுமையான தீர்வு காணப்படாத நிலையில் இத்தகையதொரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வது இந்தியர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையும் புறந்தள்ளுவதற்கு சமமாகும்.

வரும் அக்டோபர் 18ஆம் தேதி இந்தியர்களின் பெருவிழாவான தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தீபாவளி கொண்டாட்டங்களில் இந்தியர்கள் திளைத்திருக்கும் வேளையில் அக்டோபர் 20ஆம் தேதி 'மலேசியா தினக் கொண்டாட்டத்தை' நம்பிக்கைக் கூட்டணி ஏற்பாடு செய்துள்ளது ஏற்க முடியாதது ஆகும்.

15.9.17இல் அலோர்ஸ்டாரில் கொண்டாடப்படவிருந்த இந்த 'மலேசியா தினக் கொண்டாட்டம்' கெடா சுல்தானின் மறைவு முன்னிட்டு வேறொரு தேதிக்கு மாற்றிவைக்கப்படுகிறது. இரங்கலை அனுசரிக்கும் விதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வு இந்தியர்களின் கொண்டாட்டத்தை பணயம் வைப்பதாக அமைந்திடலாமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியர்களை வழக்கம்போல் கோமாளி கூட்டமாகவே நம்பிக்கைக் கூட்டணியும் கருதுகிறதா? என்ற அவர், சிறுபான்மை இனம் பொருளாதார பலமின்மை காரணத்திற்காக ஓரங்கட்டப்படுவது நம்பிக்கைக் கூட்டணிக்கு அழகல்ல.

சீனப் பெருநாள், நோன்புப் பெருநாள் காலங்களில் இதுபோன்ற தேசிய கொண்டாட்ட நிகழ்வுகளை  ஏற்பாடு செய்யாத நிலையில் இந்தியர்களின் தீபாவளி பெருநாள் கொண்டாட்டங்களில் மட்டும் ஏற்பாடு செய்வது ஏன்?

தீபாவளி காலத்தில் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இந்தியர்கள் கலந்து கொள்வது எப்படி?  என பலர் என்னிடம் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அதைத் தவிர்த்து நானும் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் வேளையில் மலேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா என சிந்திக்கவேண்டியுள்ளது என பேராசிரியர் இராமசாமி கூறினார்.

No comments:

Post a Comment