Sunday 10 September 2017

'புளூவேல்': இணைய விளையாட்டுக்கு வேண்டும் தடை- பிபச கோரிக்கை

சுகுணா முனியாண்டி
பினாங்கு-
அண்மையக் காலமாக உலகை அச்சுறுத்தும் 'நீலத்திமிங்கலம்' என்ற இனைய தள  விளையாட்டை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த விபரீத விளையாட்டால் ரஷ்யாவை சேர்ந்த 16 வயதுடைய விரோனிகா,15 வயதுடைய  யூலியா இருவரும் ஓர் அடுக்குமாடி வீட்டின் கூரையிலிருந்து தற்கொலை செய்து  கொண்டதுடன், இந்தியாவில் கூட 14 வயதிலிருந்து 19 வயதுடைய 4 பேர் தூக்கு மாட்டிக்கொண்டும், மாடியிலுருந்து  விழுந்தும் தற்கொலை செய்து கொண்டனர்.
ரஷியா,அமெரிக்கா,இத்தாலி,பிரேசில்,ஆர்ஜெண்டினா, போர்த்துக்கல் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று இட்ரிஸ் கூறினார்.

'நீலத்திமிங்கலம்' ஒரு விளையாட்டு அல்ல,மாறாக உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டிவிடும் ஒரு மோசமான செயல்  என்றும் அவர் மேலும் விவரித்தார். இந்த நீலத்திமிங்கலம் விளையாட்டில் சேரும் ஒருவர் தொடர்ந்து 50 நாட்களுக்கு அவ்விளையாட்டு வழிகாட்டி இடும் பணிகளை பின்பற்றுவதுடன், அதன் பிறகு மற்ற விளையாட்டின்  மற்ற சவாலுக்கு ஒருவர் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் இறுதி நாளில் அவ்விளையாட்டை  விளையாடுபவர் 50ஆவது  நாளில் தற்கொலை செய்து கொள்வதுடன் இவ்விளையாட்டு முடிவடையும் என்பதால், உயிரை மாய்த்துக் கொள்ளும் இதுபோன்ற  விளையாட்டு தேவைதானா என்றும் இட்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

தங்களுடைய குழந்தைகள் அதிக நேரம் தனிமையில் இருப்பார்களேயானால்,அக்குழந்தைக்கு மன ரீதியான பிரச்சினை இருக்கின்றது என்றே சொல்லலாம் என்றார் அவர்.

இதனிடையே அறையை பூட்டிக்கொண்டு அதிக நேரம் அறையிலேயே நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள், அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கைப்பேசியில் உரையாடுவதும், அதிகமாக பேய் திகில் கொண்ட திரைப்படங்ளை பார்ப்பதும், யாரிடமும் நட்பு கொள்ளாமல், உடலில் கத்தியால்  காயத்தை விளைவித்துக் கொள்வதும் இந்த திமிங்கல  இணைய தள விளையாட்டில்  பலியாகும் வாய்ப்பு இருப்பதாக இட்ரிஸ் கூறினார்.

ஆகவே,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முகநூல்,வாட்ஸ் ஆப், குஞ்செய்தி என சமூக வலைத்தளங்களில் உள்ள விபரீதங்கள் பற்றி பேச வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

தங்களை பற்றிய விபரங்களை யார் கேட்டாலும் சொல்லக்கூடாது என்று தங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுரைக் கூற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  இந்த நீல திமிங்கல விளையாட்டின்  தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும், பள்ளி பாட  வேளையில் அவ்விளையட்டின்  விளைவுகளையும், இதனால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளையும் மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சகா நண்பர்கள் இந்த 'நீல திமிங்கல' விளையாட்டில் சிக்கி தவிக்கும் சக நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டால் உடனடியாக அவர்களை அதிலிருந்து மீட்டு எடுப்பதற்கான வழிகளை காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment