Monday 2 October 2017

14ஆவது பொதுத் தேர்தல்: அம்னோவை வீழ்த்துவதே நமக்கு முக்கியம்- சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நமது எதிரி ம இகாவோ, மசீசவோ,  கெராக்கானோ கிடையாது; மாறாக பக்காத்தானின் பொது எதிரி அம்னோ மட்டுமே என  பேராக் மாநில பக்காத்தான் ஹராப்பானின் செயலாளர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கு மிக முக்கியமானது ஆகும். இந்த தேர்தலில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்திடும் தேசிய முன்னணிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமைந்திடும் இதில் பக்காத்தான் ஹராப்பான் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இந்த தேர்தலில் நமது (பக்காத்தான் ஹராப்பான்) பொது எதிரி அம்னோ மட்டுமே. மஇகாவோ, மசீசவோ, கெராக்கானோ எதுவுமே நமது எதிரி கிடையாது. ஏனெனில் அவர்கள் எல்லாம் ஏற்கெனவே மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள். பலம் இழந்த இந்த கட்சிகளை எதிர்ப்பதை விட இன்னும் அதிகாரம் செலுத்தும் அம்னோவை வீழ்த்துவதே நமக்கு முக்கியமானதாகும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய சூழல் மோசமான சூழலில் அமைந்திருப்பதோடு மக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவதில் தேசிய முன்னணி தவறி விட்டது.

மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும் அவதிபடுகின்றனர். அந்தளவு மக்களின் சுமை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி  வரி, பொருட்களின் விலை உயர்வு உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் வரும் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கையும் சிந்தித்து போட வேண்டும் என சிவகுமார் குறிப்பிட்டார்.

மெங்கிளம்பு, ஃபாலிமில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற பத்துகாஜா ஜசெக  விருந்துபசரிப்பு நிகழ்வில் பூச்சோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் உட்பட ஜசெக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment