Sunday, 30 July 2017

வேட்பாளரை களமிறக்கினால்தான் வெற்றி பெற முடியும் - மு.இளங்கோவன் வலியுறுத்து


சுங்கை சிப்புட்
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் இறுதி நேரத்தில் தலை காட்டாமல் முன்கூட்டியே தொகுதியில் களமிறங்கி சேவையாற்ற வேண்டும் என இத்தொகுதியின் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து கூறினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு விரையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் வேட்பாளர் யார் என்ற விவகாரமே இங்கு பூதாகரமாக வெடிக்கிறது.
மஇகா தேசியத் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அலங்கரித்த இத்தொகுதி கடந்த இரு தவணையாக எதிர்க்கட்சி வசம் உள்ளது. இத்தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் இத்தொகுதியில் களமிறக்கப்படும் வேட்பாளரை பொறுத்தே வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது. இத்தொகுதியை மீண்டும்  தேசிய முன்னணி கைப்பற்ற வேண்டுமானால் வேட்பாளராக களமிறங்குபவர் முன்கூட்டியே களமிறக்கப்பட வேண்டும்.

வேட்பாளரின் சேவை பொறுத்தே இங்கு வெற்றி வாய்ப்பு  தீர்மானிக்கப்படும் சூழலில் வேட்பாளராக களமிறக்கப்படுவர் இங்கு சேவை செய்து மக்களின் மனங்களை கவர வேண்டியது அவசியமாகும் என அண்மையில் இங்குள்ள விஸ்மா அம்னோவில் நடைபெற்ற தொகுதி மஇகாவின் 24ஆம் ஆண்டு பொது கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையில் இளங்கோவன் முத்து வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி அம்னோ தலைவருமான டத்தோ சூல்கிப்ளி, தொகுதி மஇகா துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உதவித் தலைவர்கள், கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



சுங்கை சிப்புட்டை மீட்டெடுக்க தேசிய, மாநில மஇகாவுக்கு எண்ணமில்லையா?


சுங்கை சிப்புட்-
கடந்த இரு தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகின்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு தேசிய, மாநில மஇகா தலைமைத்துவத்திற்கு துளியளவும் எண்ணமில்லையா? என இத்தொகுதி கிளைத் தலைவர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அண்மையில் இங்கு நடைபெற்ற தொகுதி மஇகா கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்தனர்.

2008, 2013ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் இங்கு களமிறங்கிய மஇகா  வேட்பாளர்கள் எதிர்க்கட்சியினரிடம் தோல்வியை சந்தித்தனர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வெகு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இத்தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி மீட்டெடுப்பதற்கு ஏதுவாக தேசிய, மாநில மஇகா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கிளைத் தலைவரான அப்துல் ஜபார் வினவினார்.

வெற்றி பெறுவதற்கான பிரகாச சூழல் இத்தொகுதியில் தென்படும் வேளையில் தேசிய, மாநில மஇகா துளியளவும் இங்கு அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகிறது.

'எடுப்பார் கைப்பிள்ளை' தொகுதி போல வருபவரெல்லாம் வேட்பாளர் என்ற துர்பாக்கிய நிலையே காணப்படுவதால் ஆக்ககரமான திட்டங்கள், நடவடிக்கைகளின் வழி இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள தேசிய, மாநில மஇகா தலைமைத்துவம் முனைப்பு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதோடு, கடந்த காலங்களில் மக்களுக்கு முன்னெடுக்கப்படாத திட்டங்களினாலே இங்கு  களமிறங்கிய மஇகா வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்த வேளையில் இனி வரும்  காலங்களில் வாக்காளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என கிளைத் தலைவர்களில் ஒருவரான லோகநாதன் கேள்வி எழுப்பினார்.

இதுவரையிலும் தேசிய முன்னணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டு உழைத்த மஇகாவினர் கூட எத்தகைய சலுகைகளையும் வாய்ப்புகளை அனுபவிக்காத நிலையில் இங்குள்ள வாக்காளர்களின் நிலையை உணர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


மலேசியாவில் பணியாற்றும் 17 லட்சம் அந்நிய நாட்டவர்கள்

கோலாலம்பூர்-
ந்நாட்டிலுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்து 88 ஆயிரம் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கையாகும்.

இதில் உள்துறை அமைச்சு தத்தம் நாடுகளுக்கேற்ப வகைப்படுத்தியதில் நம் நாட்டில் 7 லட்சத்து 28 ஆயிரம் இந்தோனேசியர்கள் உள்ளனர். இதையடுத்து 405,898 நேப்பாளியர்கள், 221,089 வங்காளதேசிகள், 127, 705 மியன்மார்காரர்கள், 114, 455 இந்தியர்கள், 5,964 இலங்கையர்கள், 5,103 கம்போடியர்கள் உட்பட லாவோஸ் நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளனர் இந்நாட்டில் வேலை செய்கின்றனர்.

இணையம் வழி 15 நாடுகளைச் சேர்ந்த அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் திட்டம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் அந்தியத் தொழிலாளர்கள் சட்டப்படி முறையான வேலைஅனுமதி அட்டையுடன் மலேசியாவில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

அந்நியத் தொழிலாளர்களை தங்களின் நாடுகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தும்படி செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் (ஜசெக) தெரேசா கோக் அமைச்சிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சு இந்த தகவலை தெரிவித்தது.

கெட்கோ பாட்டாளிகளுக்கு அநீதி இழைக்கும் பெரு நிறுவனத்தை புறக்கணியுங்கள் - பிஎஸ்எம் அருட்செல்ல்வன்



ஈப்போ-
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கெட்கோ தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அத்தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என பிஎஸ்எம் கட்சியின்  பொதுச் செயலாளர் அருட்செல்வன் வலியுறுத்தினார்.

அதிகார பலமும், பண பலமும் ஒன்றிணைந்து தோட்டப் பாட்டாளிகளின் போராட்டத்தை திசை திருப்புவதோடு அவர்களுக்கு எதிரான அடக்குமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்களது நில மீட்பு உரிமை போராட்டத்தை முன்னெடுத்துள்ள இந்த தோட்டப் பாட்டாளிகள் எதிர்கொண்டு வரும் போராட்டத்திற்கு மலேசிய இந்தியர்கள் ஒன்றிணைந்து ஆதரவை தரும் வகையில் சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையை அனைவரும் கையில் எடுக்க வேண்டும்.

குறிப்பாக அவர்களின் வணிக, வர்த்தக மையங்களை புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியர்களும் முன்னெடுத்தால் இவ்விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு காணப்படும் என இங்கு நடைபெற்ற விளக்கவுரை கூட்டத்தில் கலந்து கொண்ட அருட்செல்வம் கூறினார்.

சம்பந்தப்பட்ட தோட்டத்திற்குச் சென்று போராடுவது மட்டும் போராட்டமாகாது. சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்தை நிராகரிக்கும் வகையிலான போராட்டத்தை முன்னெடுத்தாலே நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.

தங்களின் நில மீட்பு உரிமை போராட்டத்திற்கு போராடி வரும் தோட்டப் பாட்டாளிகள் கைது செய்து, சிறையில் அடைத்து பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் வேளையில் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களும் இவர்களின் போராட்டத்திற்கு கைகொடுக்க வேண்டும் என அருட்செல்வன் குறிப்பிட்டார்.


இந்த விளக்கக் கூட்ட நிகழ்வில் கெட்கோ தோட்டப் பாட்டாளிகளான ஜோன் கென்ஸ்டியன், மணிமேகலை உட்பட இங்குள்ள பல்லேறு அரசியல் கட்சியினர், பொது இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

வேட்பாளராக எத்தரப்பும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம்!

மலாக்கா-
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களையே நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்க அம்னோவும் தேசிய முன்னணியும் முன்னுரிமை அளிக்கும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ  அஹ்மட் ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

இத்தேர்தலில் எத்தகைய தரப்பினரும் தாம் தான் வேட்பாளர் என பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் மக்கள் வெற்றி பெற செய்யும் வேட்பாளர் யார் என்பது பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு தெரியும்.

14ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு  முக்கியமானது எதுவென்றால் மக்களின் தேர்வும், மக்களின் ஆர்வமும் தான். மக்களுக்கு யார் தேவையோ அவர்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும். மக்களுக்கு யார் வேண்டுமோ அதனையே பிரதமர் கொடுப்பார்.

ஆதலால் எந்தவொரு தரப்பும் வேட்பாளராக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம். மக்களுக்கு வேண்டாத வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஓர் இக்கட்டான சூழலை பிரதமர் இம்முறை ஏற்படுத்தி கொள்ள மாட்டார். மக்கள் ஒதுக்கி வைக்கும் வேட்பாளர் இம்முறை நமக்கு தேவையில்லை என தங்கா பத்து அம்னோ தொகுதி கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறினார்.


Saturday, 29 July 2017

இயக்குனர் இரா. பிரகாஷ் ராஜாராம்மின் ஞாபகங்கள்



வாழ்க்கையில் பல ஏமாற்றங்களும் காதல் தோல்வியுடன் வலம் வரும் இரு முக்கிய கதாபாத்திரத்தை எவ்வாறு ஒரு நாட்குறிப்பு அவர்களை ஒன்று சேர்க்கின்றது என்பதை மிக அழகாகச் சித்தரிக்கின்றது ஞாபகங்கள் தொலைக்காட்சி நாடகம்.

விகடகவி மகேன்,சங்கீதா கிருஷ்ணசாமி, டி.எச்.ஆர் ராகா ஆனந்தா, கல்பனா ஸ்ரீ, பிரேம் நாத் ஆகியோர் இந்நாடகத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நாடகத்தில் விகடகவி மகேன் மற்றும் சங்கீதா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இருவருமே தங்களுடைய காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி புதிய ஒரு வாழ்க்கையை நோக்கி பயணிக்கின்றார்கள்.



மகேன் தன்னுடைய காதலி செய்த நம்பிகைத் துரோகத்தை ஏற்று கொள்ள முடியாமல் ஃப்ரேசர் மலைப்  பகுதியிலுள்ள நூலகத்தின் பொறுப்பாளராகப் பாணியாற்ற செல்கின்றார். அந்நூலகத்தில் அவருக்கு ஒரு  நாட்குறிப்பு கிடைக்கின்றது. தனிமையில் இருக்கும் மகேனுக்கு அந்த நாட்குறிப்பு துணையாக இருக்குமா? மீண்டும் அவருக்கு காதல் வாழ்க்கை கிடைக்குமா? கேள்விகளுக்குப் பதில் ஞாபகங்கள் நாடகம்.

இயக்குனர் இரா. பிரகாஷ் ராஜாராம் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்நாடகத்தை நாளை ஜூலை 30-ஆம் தேதி இரவு 10- மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் காணத் தவறாதீர்கள். 

கே.வி.ஆனந்த இயக்கத்தில் நடிக்க ஆர்வம் - விக்ரம்


நடிகர் விக்ரம் 'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து மேலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். நான்காவது படமாக கே.வி.ஆனந்த இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவுள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படமும், விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' திரைப்படமும் இறுதிக்கட்ட வேலையில் உள்ளது. இதையடுத்து ஹரி இயக்கத்தில் வெளியாகவுள்ள 'சாமி-2' படத்திற்கான வேலைகள் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் படம் நடிப்பதற்கு விக்ரம் ஆர்வம் செலுத்து வருகிறார் என தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரையில் எந்தவொரு அதிகார்வபூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் தனுஷ்



'ரஞ்சனா' படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் தனுஷ். இப்படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் நடிக்க போவதாக தெரியவந்துள்ளது.

டைரக்டர் ஆனந்த் எல் ராய் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாராம். தற்போது ஷாருக்கானை வைத்து ஆனந்த் எல் ராய் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடனே எனது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்.

ஆனந்த் எல் ராய் படத்தில் நடிக்கபோவது உண்மை என்று தனுஷ் உறுதியளித்தார்.

'குற்றவாளியே'! பாக். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! பறிபோனது நவாஸ் ஷரீப் பதவி

ஸ்லாமாபாத்-
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் குற்றவாளியே என தீர்ப்பளித்ததை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்களில் பல உலகத் தலைவர்களுடன் நவாஸ் ஹரீப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது குடும்ப சொத்துகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் நாடு கடந்து வரியற்ற பிரதேசங்களில் அமைந்துள்ள சில நிறுவனங்களில் நவாஸ் ஷரீப்பின் பிள்ளைகளுக்கு பங்கு இருப்பது அம்பலமானது. மேலும் அவர் பல சொத்துகளை லண்டனில் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது.

உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நவாஸ் ஷரீப்புக்கு எதிராக ஐந்து நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்தனர்.

நாடு கடந்த வரியற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் சட்டவிரோதமாக பங்கு வைத்திருந்ததால் அவர் பிரதமர் பதவிக்கே தகுதியில்லாதவர் என்பதோடு அவரை உடனடியாக கைது செய்யும்படியும் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

இனி வாழ்நாள் முழுவதும் நவாஸ்  ஷரீப் பிரதமர் பதவிக்கே வர முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டதோடு நிதியமைச்சர் இஷாக் தாரும் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமது பிரதமர் பதவியை நவாஸ் ராஜினாமா செய்துள்ளார் என பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை கூறியது.



உலக பணக்காரர் பட்டியல் முதல் இடத்தில் ஜெப் பெஜோஸ்


உலக பணக்காரர் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தை பிடித்து வந்த பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்.

ஜெப் பெஜோஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. பில்கேட்சின் சொத்து வியாழக்கிழமை 9 பில்லியன் டாலராக இருந்தது. அமேசான் பங்குகள் உயர்ந்த சில நிமிடங்களில் முதல் இடத்தை பிடித்தார் ஜெப் பெஜோஸ்.

பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகள் உள்ளன. 53 வயதான பெஜோஸின் பெரும்பாலான சொத்துக்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்தாலும் வாஷிங்டன் போஸ்ட் செய்திதாள், தனியார் விண்வெளி நிறுவனம் 'புளு ஆர்ஜின்' ஆகியவற்றின் உரிமையாளராகவும் உள்ளார்.

Friday, 28 July 2017

சட்டவிதிகள் ஏற்பு; சின்னத்தில் தேவை சீரமைப்பு - துன் மகாதீர் தகவல்



புத்ராஜெயா-
பக்காத்தான் ஹராப்பானின்  சட்டவிதிகளை ஏற்றுக் கொண்டுள்ள தேசிய பதிவு இலாகா (ஆர்ஓஎஸ்) அக்கூட்டணியின் சின்னத்தை சீரமைப்பு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது என துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

இக்கூட்டணியின் சட்டவிதிகளை ஆராய்ந்துள்ள ஆர்ஓஎஸ் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என நல்ல அபிப்ராயத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் சின்னத்தை மட்டுமே மறுவடிவம் செய்யுமாறு கோரியுள்ளது.

'பக்காத்தான்' மற்றும் 'ஹராப்பான்' என இரு பெயர்களை கொண்டுள்ள  போதிலும் சின்னத்தில் 'ஹராப்பான்' என  குறிப்பிடுவது ஏற்புடையதாகாது.

இக்கூட்டணி தனது சின்னத்தை மேம்படுத்தியுள்ள நிலையில் இன்னும் இரு தினங்களில் அதன் மறுவடிவம் பூர்த்தி செய்யப்படும். பின்னர் விண்ணப்பங்கள், கூட்டணியின் சட்டவிதிகள் முறையாக சமர்ப்பிக்கப்படும் என இக்கூட்டணியின்  பொதுத் தலைவரான துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இணைய பதிவின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கட்ட வேளையில் இன்று புத்ராஜெயாவில் உள்ள ஆர்ஓஎஸ் அலுவலகத்திற்கு வந்த அவர், சில கடிதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் சொன்னார்.


"கலாம்... கலாம்... சலாம்... சலாம்..." 'அப்துல் கலாம்' அனைவருக்குமான தலைவர்


'ஓர் ஊரே புகழும்படி வாழ்ந்தால் அது ஒரு சிறந்த கிராமத் தலைவனுக்கு அழகு. ஒரு மாநிலமே சேர்ந்து புகழ்ந்தால் அது அந்த மாநிலத் தலைவனுக்கு கிடைத்த கெளரவம். ஒரு தேசமே ஒன்று திரண்டு புகழ் பாடினால் அது அந்த தேசத் தலைவனின் சிறந்த தலைமைத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால் கிராமம், மாநிலம், தேசம், கண்டங்கள் என ஓர் எல்லைக்கோட்டு அப்பாற்பட்டு   இந்த உலகமே புகழ் பாடினால் அவரை விட சிறந்த மாமனிதர்  இம்மண்ணில் இருக்க முடியாது. இத்தகைய சிறப்புக்குரிய மாமனிதர் இந்தியாவின் முன்னாள் அதிபர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  ஆவார்.

இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் தங்களின் முன்னோடியாக கொண்டாடி மகிழ்கின்ற மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்த பூவுகை விட்டு சென்ற இரண்டாமாண்டு நினைவு நாள் நேற்று.

'நீ தூங்கிக் கொண்டிருக்கும்போது காண்பது கனவல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு' என மாணவர், இளைய சமுதாயத்தின் உணர்வை தூண்டிவிட்டு தன் வாழ்நாளை அவர்களுக்காக அர்ப்பணித்த அப்துல் கலாம், இந்தியாவின் முன்னாள் அதிபர் மட்டுமின்றி அணு விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர்.

தமிழகத்தின், ராமேஸ்வரம் ஊரில் மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராகவும் நாட்டின் 11ஆவது குடியரசு தலைவராகவும் விளங்கினார்.

'இளைஞர்கள், மாணவர்களால் மட்டுமே ஒரு சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என்பதை தன்னம்பிக்கையாகக் கொண்டு குடியரசுத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாணவர்களிடையே கலந்துரையாடல் நடத்துவதை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.


அவருடைய 'இந்தியா 2020' என்ற நூலில் கலாம், இந்தியா அறிவியலில் வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரைத் திட்டத்தை அறிவித்திருந்தார்


அறிவியல் ஆலோசகர் பதவியிலிருந்து 1999இல் பதவி விலகிய பிறகு, ஒரு லட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.

அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை திட்டம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்  என்றார்.

எந்த மாணவர் சமுதாயத்திற்காக தனது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருந்ததாரோ அந்த மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிர் நீத்த 'மகான்' அப்துல் கலாம் ஆவார்.

ஜூலை 27, 2015இல் இந்தியாவின் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

ராமேஸ்வரம், பேய்க்கரும்பு மண்ணில் புதைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் மீளாத் துயில் கொண்டிருந்தாலும் அவரின் ஆன்மா இன்னமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மனதில் எழுச்சி தீபமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கின்றார்.

இளைஞர்கள் எளிதில் ஒருவரை  தலைவராக ஏற்பதில்லை. அப்படி ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டால் அவரை விட சிறந்த தலைவர் உலகில் வேறெங்கும் இருக்க முடியாது.

அவ்வகையில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகளில் வாழ்கின்ற இளைஞர்கள் ஒரு தலைவராகவும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் 'அப்துல் கலாமை' ஏற்றுக் கொண்டதற்கு தலை வணங்கி சொல்வோம்  " கலாம்... கலாம்... சலாம்... சலாம்...!"

Sunday, 23 July 2017

மருந்தில்லாமல் ஆரோக்கியமான வழிமுறையில் அதிகமான நோய்களுக்கு தீர்வு காண முடியும் - டத்தின் டாக்டர் எஸ். இராஜேஸ்வரி


கடந்த காலங்களை விட சமீபக் காலமாக அதிகமானோர் மருந்துகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அடிமையாகியுள்ளனர். இதற்கு முதல் காரணம் அவர்களது உணவுக் கட்டுபாடும் உடற்பயிற்சியின்மையும் ஒரு காரணமாகும். அதிகமான மருந்து உட்கொள்வதால் பிற்காலத்தில் நாம் மேலும் பல நோய்களுக்கு ஆளாகுகிறோம் என்பது அனைவரும் அறியாத ஒன்று.

இதனை நிவர்த்திச் செய்யும் வகையில் டத்தின் டாக்டர் எஸ். இராஜேஸ்வரி புது யுக்தியைக் கையாண்டு மருந்தில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் இயற்கை அழகு பாரமரிப்புக்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் சிறப்பான முறையில் இங்கு செராஸ் பத்து செம்பிலானிலுள்ள ஜாலான் தெங்ஙா செராஸ் செலாத்தான் 118இல் உள்ள தனது சிகிச்சை மையத்தை வழிநடத்தி வருகின்றார்.

டத்தின் டாக்டர் எஸ். இராஜேஸ்வரி பற்றிக் கூறுகையில், இவர் மலாக்கா மாநிலத்திலுள்ள சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் மலாக்கா மணிப்பால் பல்கலைகழகத்தின் மருத்துவப் பட்டதாரி ஆவார். இவர் தனது நிபுணத்துவ டாக்டர் பட்டப் படிப்பை இங்கிலாந்தில் முடித்துள்ளார். பிறகு, அழகுக்கலை தொடர்பான பட்டப்படிப்பை ஜெர்மனியில் முடித்துள்ளார். இவரின் திறமைக்காக பல நாடுகளில் நற்சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது ஒவ்வொரு முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் தன் கணவர் டத்தோ டாக்டர் ரவி மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்று 'பாரதம்' மின்னியல் ஊகடகத்தின் சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும், அதிகமானோர் தினசரி வேலைப்பளுக் காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை, உணவகங்களில் உண்பதாலேயே அதிகமான நோய்களுக்கு அடிமையாகின்றோம். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நடு எலும்பு வலி என நிறைய நோய்களுக்கு ஆளாகின்றோம். இந்த நோய்களை மருந்து, ஊசி, வலி இல்லாமல் நாடித் துடிப்பின் மூலம் பிராணவாயு அளவைக் கணக்கிட்டு இந்த வகை நோய்களை குணப்படுத்த முடியும்.



'வெள்ளம் வரும் முன் அணை போடு' என்ற பலமொழிக்கேற்ப நோய் வரும் முன் அதற்கான வழிமுறைகளை கையாண்டால் நோய்களை தடுக்க இயலும். தினசரி உடற்பயிற்சி என்பது நம் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக செய்தலும் நிறையான சாப்பாடு முறையை கையாளுதலும் நோய்களிருந்தும் இளமை பருவத்தை மேம்படுத்தவும் சிறப்பாக அமையும் என்று டாக்டர் எஸ். இராஜேஸ்வரி கூறினார்.

20 வயதில் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு, 30 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவியவர்களும் உண்டு. இதனைத் தடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு என டாக்டர் இராஜேஸ்வரி குறிப்பிட்டார்.

இந்த நோய்களை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்காக வெள்ளி செலவில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மருத்துவ சாதனங்களை சிகிச்சை மையத்தில் (கிளினிக்) இறக்குமதி செய்து சிறப்பான சிகிச்சைகளை வழங்கி வருகின்றார். இதன் மூலம் ஊசி பயன்படுத்தப்படாமல் வலி இல்லாமல் சிகிச்சை பெறலாம். மேலும் முக்கியமான உயிர்க் கொல்லி நோய்களை இதன் வழி குணப்படுத்த முடியும்.



இதுவரை, நடக்க முடியாதவர்களை நடக்க வைத்துள்ளனர், இருதய அடைப்புள்ளவர்களை குணப்படுத்தியுள்ளார். இதனிடையே, இவரின் சிறப்பு அம்சமாக கரு வளர்ச்சியில்லாதவர்களுக்கும் நிவாரணமளித்து அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பெண்கள் மட்டுமே அழகுக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களும் அதற்கு அதிகமான முக்கியத்துவம் வழங்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் நம் உள் உறுப்புகள், சுவாச காற்று பிரச்சினை, முகப்பரு, உடல் பருமன் குறைப்பது, முடிப் பிரச்சினை, பெண்களுக்கான மூக்கு  அழகுப்படுத்துவது, இளமையாக்குவதற்கான சிகிச்சை என குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மருந்தில்லா சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கி அவர்களின் செலவீனங்களுக்கேற்ப சிகிச்சைகள் முறையாகவும் தரமாகவும் வழங்கப்படுகிறது என டாக்டர் இராஜேஸ்வரி குறிப்பிட்டார்.

இங்கு அரச குடும்பத்தினர், நாட்டின் முக்கிய பிரபலங்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மருந்தில்லா மருத்துவ சிகிச்சை பற்றியும் அழகு சார்ந்த விவரங்கள் அறிந்து கொள்ளவும் www.cosmed.my எனும் அகப்பக்கதிலும் அல்லது https://www.facebook.com/CosMedsWellnesscherasselatan118 எனும் முகநூல் வாயிலாகவும் வலம் வரலாம்.


Friday, 7 July 2017

கெடா மாநில சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு வெ. 50 ஆயிரம் செலவில் புதிய ஹாக்கி மைதானம்



சுங்கைப்பட்டாணி-
கெடா மாநில சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானத்தை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  ஆர்.எஸ்.தனேந்திரன் அண்மையில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இப்பள்ளியின் தலைமையாசிரியர் கலைச்செல்வன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், .... கௌரவப் பொருளாளருமான ஓஜி. சண்முகம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க டத்தோஸ்ரீ  தனேந்திரன்  வழங்கிய வெ.50,000 நிதியொதுக்கீட்டில் இம்மைதானம் (ஹாக்கி) புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

அத்துடன் அங்கு நடைபெற்ற பள்ளி அளவிலான ஹாக்கி போட்டி விளையாட்டில் சுமார் 15 பள்ளிகள் பங்கேற்றன. அதில் 25 குழுக்கள்  கலந்து கொண்டன.


இப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் டத்தோஶ்ரீ தனேந்திரன் கலந்துகொண்டு இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார்.

அதோடு டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் ஹோக்கி போட்டி சுழல் கிண்ணம் ஆண்டு நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ம...க கெடா மாநில பொறுப்பாளர்கள், பள்ளியின் பெ... பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.