Friday 9 June 2017

'மலேசியாவுக்கு ஆபத்தானவர்' நாட்டுக்குள் நுழைய வைகோவுக்கு தடை!

கோலாலம்பூர்-
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசியர் பி.இராமசாமியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள மலேசியா வந்தடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை 10ஆம் தேதி சனிக்கிழமை பேராசியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு பினாங்கில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க கிடைத்த அழைப்பை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.55 மணியளவில் (.நே) தனது செயலாளர் அருணகிரியுடன் வைகோ மலேசியாவுக்கு  புறப்பட்டார்.

இன்று காலை 6.30 மணியளவில் மலேசியா வந்தடைந்த வைகோவை  'நீங்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என கூறி தடுத்து நிறுத்திய குடிநுழைவு துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளை சந்தியுங்கள் என கூறி அழைத்துச் சென்றனர்.

வைகோவை சந்தித்த உயர் அதிகாரிகள் நீங்கள் இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகப் பல கேள்விகளைக் கேட்டனர். ‘இலங்கையில் உங்கள்மீது பல வழக்குகள் உள்ளனஎன்று சொன்னார்கள். “இல்லை, நான் இந்தியக் குடிமகன்,” என்று வைகோ கூறி கடவுச் சீட்டைக் காட்டிய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

இத்தகவல் பேராசியர் இராமசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. பேராசியர் இராமசாமியும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் எவ்வளவு முயன்றும் அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.

துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. அவரை நாங்கள் அனுமதிக்க முடியாது,” குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  இன்று இரவு 10.45 மணிக்குச் சென்னை செல்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் வைகோவைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment