Wednesday, 7 June 2017

சிறுமி மீது தாக்குதல்: வீடியோ பதிவாளர் மீதும் சட்டம் பாயுமா?


கோலாலம்பூர்-
சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும்  சிறுமியை தாக்கும் காணொளியில் இடம்பெற்ற மூதாட்டியை போலீஸ் கைது செய்துள்ள நிலையில் அதனை வீடியோவாக பதிவு செய்த நபர் மீதும் சட்ட நடவடிக்கை பாயுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

உணவை கீழே சிந்தியதற்காக  6 வயது சிறுமியை குச்சியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார் அவரின் பாட்டி என நம்பப்படும் மூதாட்டி. இந்த காணொளியை கண்ட சமூக பயனர்கள் கொதித்தெழுந்ததன் விளைவாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த மூதாட்டி.

ஆனால் இந்த விவகாரத்தில் தண்டிக்கப்பட வேண்டியது மூதாட்டி மட்டுமல்ல. சிறுமி கடுமையாக தாக்கப்படுவதை தடுக்காமல் அதை வீடியோ காட்சியாக பதிவு செய்த நபரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர் தான்.

2 நிமிடம் 49 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பதிவு செய்த நபரால் அந்த சிறுமி தாக்கப்படுவதை ஒரு நொடியில் தடுத்திருக்கலாம். ஆனால் சிறுமி தாக்கப்படுவதை தடுக்காமல் வீடியோ பதிவு செய்வதிலேயே மும்முரமாக இருந்த அதன் 'ஒளிப்பதிவாளரும்' தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியே.

சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை பேசியுள்ள வீடியோ காட்சியில் 'சிறுமி தாக்கப்படுவதை வீட்டில் வளர்க்கப்படும் நாய் கூட முயற்சி செய்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் சிறுமி தாக்கப்படுவதை தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காதது தண்டிக்கப்பட வேண்டியவர் தான் எனவும் அவர் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது' எனவும் கூறியுள்ளார்.

தவறு செய்பவர் குற்றவாளி என்றால் அந்த தவறை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தவறுதான். ஆதலால் சிறுமி தாக்கப்பட்டதை வீடியோ காட்சியாக பதிவு செய்தவர் மீது சட்டம் பாய வேண்டும்.

அப்போதுதான் கண்முன்னே தவறு நடக்கும்போது அதை வீடியோவாக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தவறை தட்டிக் கேட்கும் மனிதநேயம் மிக்கவர்கள் உருவெடுப்பர்.

No comments:

Post a Comment