Thursday, 29 June 2017

இந்திய இளைஞர் கொலை? சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

ஜோர்ஜ்டவுன்-
நைலோன் கயிற்றால் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இங்கு ரிப்பல் ரேஞ்ச் அருகே இருக்கும்  ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் எம்.சக்திவேல் எனும் 30 வயது இளைஞரே பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

காலை 9.30 மணியளவில் வீட்டின் உரிமையாளர் சக்திவேலின் சடலத்தை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போர்வையால் சுற்றப்பட்டிருந்த  சடலத்தை மீட்டு சவப்பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது ஒரு கொலை சம்பவம் என வகைபடுத்திய ஜோர்ஜ்டவுன் துணை ஓசிபிடி சரவணன், இதன்  தொடர்பில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

சக்திவேலின் உடலில ஏற்பட்டுள்ள காயங்களையும் அவர் முகத்தில் காணப்படும் வீக்கத்தையும் வைத்து பார்க்கும்போது, அவர் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு பலமுறை தாக்கப்பட்டிருக்கக்கூடும் எம முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவை  வைத்து சக்திவேலை தாக்கிய நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்

சந்தேகத்தின் பேரில் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட 15 வயது சிறுவனும் 30 வயது மதிக்கத்தக்க வேலையில்லா இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் மேல் இதற்கு முன்னரே கொலை, கொள்ளை, சண்டை போன்ற புகார்கள் இருக்கின்றன என அவர் சொன்னார்.

இதனிடையே, சக்திவேலை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதை பார்த்ததாக அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment