Saturday 24 June 2017

நவீன் மரணம்: மீளாத் துயரில் சிக்கியுள்ளோம் - பாட்டி கிருஷ்ணவேணி வேதனை



பினாங்கு-
நவீன் மரணத்தில் மீளாத் துயரில் சிக்கி தவிக்கிறோம் என அவரின் பாட்டி கிருஷ்ணவேணி வேதனையுடன் குறிப்பிட்டார்.

கடந்த 10ஆம் தேதி ஐவர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தி.நவீன் (வயது 18) கடந்த 15ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

நவீனின் மரணம் மலேசியர்கள் மட்டுமின்றி உலகளவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நவீனின் மரணம் எங்களை மிகப் பெயரில் மூழ்கடித்துள்ளது. குறிப்பாக நவீனின் தாயார் சாந்தியும், சகோதரி திவாஷினியும் துயரிலிருந்து மீளாமலேயே உள்ளனர் என பாட்டி கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

நவீனின் துயரம் எங்களை அலைக்கழிக்கிறது. எங்களின் வலியைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நவின் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தான். இப்போது எதுவுமே இல்லாதது போலாகிவிட்டது. அவனது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்கிறோம் என ஹிலிர் பெமஞ்சாரிலுள்ள அவர் வேதனையுடன் கூறினார்.

"என் பேரன் தாக்கப்படுவதற்கு முதல்நாள், சுங்கை ஆராவிலுள்ள என் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்தான். அடுத்த வாரம் கோலாலம்பூரிலுள்ள கல்லூரியில் சேர்ந்து இசை படிக்கப் போவதாக என்னிடம் கூறினான். இரவு 2 மணி வரையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்" .

"நவீன் கொலை தொடர்பில் எங்களுக்கு  நீதி கிடைக்கவேண்டும். அதனை நீதிமன்றத்தின் முடிவுக்கே நாங்கள் விட்டுவிட்டோம். இதில் சம்பந்தப்பட்ட அந்த பையன்களின் குடும்பங்களும் வேதனைக்கு உள்ளாகி இருப்பார்கள் தான். எல்லோரும் தான் வேதனைப் படுகிறோம். ஆனால், நாங்கள் திரும்பி வரமுடியாத இடத்திற்கு நவீனைப் பறிகொடுத்து கொடுத்துத் தவிக்கிறோம்" என்று பாட்டி கிருஷ்வேணி கண்கலங்கக் குறிப்பிட்டார்.

நவீன் கொலை தொடர்பில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட நால்வர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment