Thursday, 29 June 2017

பிரார்த்தனை செய்ய சொன்ன விமானி செயலில் தவறில்லை

பெட்டாலிங் ஜெயா-
விமானத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து பயணிகளை பிரார்த்தனை மேற்கொள்ள சொன்ன விமானியின் செயலை ஏர் ஆசியா பெர்ஹாட் தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன் தற்காத்து பேசியுள்ளார்.

ஓர் இக்கட்டான சூழலில் 'இறை நம்பிக்கையாளர்' அனைவரையும் பிரார்த்தனை செய்யுங்கள் என கூறுவது இயல்பான ஒன்றுதான். ஆயினும் விமானி சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இக்கட்டான சூழலில் அவரவர் மத ரீதியில் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள் என கூறுவதில் என்ன தவறு உள்ளது? அத்தகைய சூழலில் இறைவனை வேண்டிக் கொள்வது தனக்குள்ளேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையுமல்லவா? என   முகநூல் பக்கத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

'நாம் தரையில் இருந்து கொண்டு அறிக்கை விடுவது சுலபம். ஆனால் அத்தகைய சூழலை கையாள்வது சுலபமானது அல்ல' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராஹிம், 'பயணிகளை பிராத்தனை செய்ய சொன்ன விமானியின் செயலை கண்டித்திருந்தார்' என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் 'சலவை இயந்திரம்' போல் குலுங்கியதை அடுத்து விமானம் மீண்டும் பெர்த் நகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


No comments:

Post a Comment