கோலாலம்பூர்-
இன்றைய
இளைய சமுதாயத்தினரிடையிலும், பள்ளிகளிலும் விஷமென ஊடுருவி வரும் குண்டர் கும்பல்தனம், பகடி செய்வது போன்ற கலாச்சாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என சுகாதார
அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்
தெரிவித்தார்.
சக மாணவர்களால் தாக்கப்பட்ட தி.நவீன், அந்தத் தாக்குதல்கள் காரணமாக மரண்மடைந்தார் என்ற அதிர்ச்சி தரும்
செய்தி, என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த சம்பவத்தை அணுக்கமாகப் பின்பற்றி வந்த மலேசியர்களையும்
துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறது நவீனின் மறைவு.
நவீனை இழந்து வாடும் அவரதுபெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும்
எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சோகத்தையும், இழப்பின்
வலியையும் நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
தங்கள் குடும்பத்தின் இளைய வயது மகனின் எதிர்காலம் குறித்து
கனவுகளோடும் நம்பிக்கைகளோடும் வாழ்ந்திருந்த அந்தக் குடும்பத்தினருக்கு நாம் கூறும்
எத்தகைய ஆறுதல் வார்த்தைகளும் இழப்பை ஈடு செய்ய முடியாது.
இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டம் முழுமையாகப்
பாயவேண்டும், அதற்குரிய தண்டனையை அவர்கள் பெற
வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.
பகடிவதை, குண்டர் கும்பல்தனத்தை
சம்பந்தப்பட்ட அரசாங்க இலாக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க தீவிரமான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் தேவை என்பதையும் நவீனின் இழப்பு நமக்கு வலியுறுத்துகிறது என அவர் தனது அனுதாபச்
செய்தியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment