Wednesday 24 May 2017

ஒடிசி இசை பயிலரங்கு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது!

ஒடிசி இசை பயிலரங்கு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது!



நாட்டில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘உயிரை தொலைத்தேன்’ புகழ் இசையமைப்பாளர் ஜெய், பின்னணி பாடகி பிரித்தா பிரசாத் தங்களின் ஒடிசி இசைப் பயிலரங்கின் வழி 66 இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்களை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கான தளத்தை பதிப்பதற்காக ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ் தொடக்கி அதன் வழி “ஹோம்மெட் மெலோடிஸ்" எனும் இசைத் தொகுப்பை தயாரித்துள்ளனர்.

இந்த “ஹோம்மெட் மெலோடிஸ்" இசை தொகுப்பை ஒடிசியில் பயின்ற மாணவர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். சுமார் 19 பாடல்கள் அடங்கிய இந்த இசை தொகுப்பை 66 இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து அவர்களை பல குழுக்களாக அமைத்து மாணவர்களை பாடல் வரிகளை எழுதி, பாடி, இசையமைத்துள்ளனர். 



நாட்டில் முதல் முறையாக இது போன்ற ஒரு இசை பயிற்சி பயிலரங்கு மாணவர்களைக் கொண்டு அவர்களின் திறமைக்கு வழிவிட்டு அவர்களது பாடல்களை தயாரித்து வெளியீடு செய்வதும் அதிகமான கலைஞர்களைக் கொண்டு ஒரு இசைத் தொகுப்பை உருவாக்குவதும் இந்த இசைத் தொகுப்பின் சிறப்பு அம்சமாகும்.

மேலும், அதிகமான இசைக் கலைஞர்களைக் கொண்டு முதன் முறையாக உருவாக்கப்படும் இசைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ் லேபலின் தோற்றுநரும் இசையமைப்பாளருமான ஜெய் தெரிவித்தார்.

கடந்த 8 மாதங்களாக ஒடிசி இசை பயிலரங்கில் சமகால இசை பயிற்சியை பயின்ற மாணவர்களின் பயிற்சிகளை பரிசோதிக்கவும் அவர்களுடைய திறமையை சோதிக்கவும் இறுதிப் பயிற்சியாக சுயமாக பாடல் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர்கள் இயற்றும் பாடல்கள் கிடப்பிலேயேயுள்ளன. ஆகையால், இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு இம்முறை இப்பாடல்களை இசைத் தொகுப்பாக வெளியிட புதிய முயற்சியை செய்துள்ளதாக நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஜெய் கூறினார்.



இதன் வழி, ஒடிசி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும் அவர்களுக்கு தூண்டுதலை வழங்கவும் அவர்களின் பாடல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இசைத் தொகுப்பாக வெளியிடப்படுகின்றன. இந்த இசைத் தொகுப்பில் பணிபுரிந்த மாணவர்கள் “ஹோம்மெட் மெலோடிஸ்" இசை தொகுப்பின் காப்புரிமைக்காக ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ் லேபலுடன் காப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த இசைத் தொகுப்பு வருகின்ற மே 27ஆம் தேதி சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிஜே லைஃப் ஆர்ட்ஸ் மையத்தில் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடைபெறுவதால் பொதுமக்கள் புதுமுக கலைஞர்களாகிய மாணவர்களின் முயற்சிக்கு ஆதரவை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஏனென்றால், இந்த இசைத் தொகுப்பு அவர்களின் முதல் படைப்பாகும்.




இதனிடையே, இன்றைய கால கட்டத்தில் இசைத் தொகுப்பு வெளியீடு காணுவது மிகவும் குறைந்து வரும் வேளையில், அந்த குறையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த இசைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இசைத் தொகுப்பு பொதுமக்களின் முன்னிலையில் வெளியீடு காணப்படவுள்ளது. இசைத் தொகுப்பை பொதுமக்கள் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். 


இந்த இசைத் தொகுப்பு குறித்து மேல் விவரங்களுக்கு ‘Odyssey Vocal & Music Training’ https://www.facebook.com/odysseykl/ எனும் முகநூலில் வலம் வரலாம்.

No comments:

Post a Comment