Saturday 29 April 2017

'கேமரன் மலையில்' கேவியஸ் வீரம் + விவேகம் = வெற்றியை தருமா?

'கேமரன் மலையில்' கேவியஸ்
வீரம் + விவேகம் = வெற்றியை தருமா?






குளுகுளு பிரதேசம், பனி விழும் மலை தேசம்விவசாயிகளின் வற்றாத சோலை, தேயிலை உற்பத்திக்கு உகந்த மலை என்ற பல்வேறு அடைமொழிகளை கொண்ட கேமரன் மலையில் தற்போது சில்லென்ற காற்றுக்கு பதிலாக அரசியல் அனல் வீசுகின்றது.



நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கேமரன் மலையில் வேட்பாளராக களமிறங்குவேன் எனும் வேட்கையோடு களப்பணி ஆற்றி வருகிறார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ்.

2004ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தொகுதியாக அறியப்பட்ட கேமரன் மலை தொகுதியில் மஇகா வேட்பாளரே களமிறங்குகின்ற சூழலில் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதி மைபிபிபிக்கு ஒதுக்க வேண்டும். அதில் நானே வேட்பாளராக களமிறங்குவேன் என முழக்கமிட்டார் டான்ஸ்ரீ கேவியஸ்.

மஇகாவின் நிராகரிப்பும் மைபிபிபியின் அதிரடியும்
13ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார் மஇகாவின் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல். ஆனால்  மஇகாவில் நிலவிய உட்கட்சி பூசலினால் கட்சி  பதவிகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீக்கப்பட்டுள்ளதாக தற்போதைய மஇகா தலைமைத்துவம் அறிவித்தது.

இதன் விளைவாக மஇகாவின் தொகுதியாக கருதப்பட்ட கேமரன் மலை தொகுதி சுயேட்சை தொகுதியாக அடையாளம் காணப்பட்டது.

டான்ஶ்ரீ கேவியஸ் களம்
14ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே கணித்துக் கொண்டிருந்த டான்ஸ்ரீ கேவியஸ் தனது அடுத்த அரசியல் தளமாக கேமரன் மலையை தேர்ந்தெடுத்தார்
சுயேட்சை தொகுதி, மக்களுக்கு உரிய சேவையில்லை என்ற  காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் சேவையை அங்கு மேற்கொண்டு வந்தார்.

முதன்மை காரணம்
கேமரன் மலையில் டான்ஸ்ரீ கேவியஸ் களமிறங்குவதற்கு முதன்மை காரணம் பகாங் மாநிலமே ஆகும். இங்குள்ள கோலா லிப்பிஸ், பெந்தா தோட்டமே அவரது பூர்வீகம் ஆகும். பிறந்த மண்ணும் அங்குள்ள மக்களும் நமக்கு ஆதரவளிப்பர்  என்ற நம்பிக்கையின் அடிப்படையே கேமரன் மலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு முதன்மை காரணம் ஆகும்.

மக்கள் சேவை
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட டான்ஸ்ரீ  கேவியஸ், இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளை களைந்து அனைத்து நிலை மக்களுக்குமான 'நம்பிக்கை நட்சத்திரமாக' அங்கு தன்னை உருமாற்றி கொண்டு வருகிறார்.

மஇகாவின்  அதிரடியிலும் அசராத நம்பிக்கை
கேமரன் மலை தொகுதியில் நாங்களே களமிறங்குவோம்; யாருக்கும் இத்தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற மஇகாவின் அதிரடி அறிவிப்புகளிலும் கிஞ்சிற்றும் மனம் தளராமல் தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இன்றும் கேமரன் மலையில் மக்கள் பணி ஆற்றி வருகிறார் கேவியஸ்.



வீரம், விவேகம், உருமாற்றம்
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மக்கள் சேவையின் வழி தனக்கான வட்டத்தை உருவாக்கிக் கொள்வதில் அவரது  வீரம் தென்படுகிறது.

தேசிய முன்னணியின் பங்காளி கட்சியாக இருந்தாலும் மஇகா செய்யாமல் விட்ட மக்கள் சேவைகளை தான் நிறைவேற்றி அங்கு தேசிய முன்னணிக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதில்  அங்கு அவரின் விவேகம் நிரம்பியுள்ளது

புதிய அணுகுமுறையில் மக்கள் சேவையை வழங்குவது மட்டுமின்றி தன்னையும் அங்கு பிரபலப்படுத்திக் கொள்வதில் உருமாற்ற யுக்தி வெளிப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ கேவியஸ் தன்னை அங்கு நிலைநிறுத்திக் கொள்வதில் இவையனைத்தும் கை கொடுக்குமா? கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில்  அலங்கரிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(இன்று 29/4/2017இல் தனது பிறந்த நாளை கொண்டாடும் டான்ஶ்ரீ கேவியசுக்கு 'பாரதம்' இணைய ஊடகம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.)

No comments:

Post a Comment