14ஆவது பொதுத் தேர்தல்;
இழந்த தொகுதியை மீட்டெடுப்போம் - டத்தோ சுப்ரா உறுதி
சுங்கை சிப்புட்
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை மலர்ந்துள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த இரு தவணைகளாக இத்தொகுதி எதிர்க்கட்சியின் வசமாகியுள்ளது. ஆனால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி உறுதி செய்யப்படும் என தன்னால் உணர முடிகிறது.
இங்குள்ள இந்தியர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதற்கு காலம் கனிந்துள்ளது.
இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாள அட்டை, குடியுரிமை, பிறப்புச் சான்றிதழ் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை 'புளூபிரிண்ட்' செயல் வடிவத்தை அறிமுகப்படுத்தியபோது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப இத்தொகுதியில் இந்தியர் விவகார சிறப்பு நடவடிக்கைக் குழுவின் (எஸ்ஐடிஎஃப்) அலுவலகம் திறக்கப்படுகிறது என சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
நேற்றிரவு நடைபெற்ற சுங்கை சிப்புட் எஸ்ஐடிஎஃப் அலுவலக திறப்பு விழாவில் மஇகா தேசிய துணைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, எஸ்ஐடிஎஃப் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம், பேராக் மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ, மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், மஇகா மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, ஜாலோங் கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா இளைஞர் பகுதித் தலைவர் மு.நேருஜி உட்பட தொகுதி பொறுப்பாளர்களும் திரளன மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment